இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான 20-20 போட்டியில் பங்களாதேஷ் அணி 08 விக்கெட்களினால் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. முதற் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்ற நிலையில் அடுத்த இரண்டு போட்டிகளையும் பங்களாதேஷ் அணி வென்றுள்ளது. இலங்கை அணிக்கெதிராக 20-20 போட்டி தொடரில் பங்களாதேஷ் அணி பெற்றுக்கொண்ட முதல் தொடர் வெற்றி இதுவாகும்.
நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 07 விக்கெட்களை இழந்து 132 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பத்தும் நிஸ்ஸங்க நிதானமாக துடுப்பாடி ஒரு பக்கமாக விக்கெட்டை காப்பாற்றி ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். மறு பக்கமாக தொடர்ச்சியாக விக்கெட்கள் வீழ்த்தப்பட்டமை இலங்கை அணிக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தியது. அவிஷ்க பெர்னாண்டோ நீக்கப்பட்டு டினேஷ் சந்திமால் அணிக்குள் கொண்டு வந்த நிலையிலும் சந்திமால் பிரகாசிக்கவில்லை. கடந்த போட்டிகளிலும் இலங்கை அணியின் மத்திய வரிசை துடுப்பாட்டத்தில் இதே சிக்கல் காணப்பட்டது. ஆனால் அதனை இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் திருத்திக்கொள்ளவில்லை.
பத்தும் நிஸ்ஸங்க 46 ஓட்டங்களோடு ஐந்தாவது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். மத்திய வரிசையில் கமிந்து மென்டிஸ் அதிரடியாக துடுப்பாடி ஓட்டங்களை உயர்த்தினார். ஆனால் அதுவும் தொடரவில்லை. 21(15) ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார். இவர் கடந்த இரண்டு போட்டிகளிலும் சேர்க்கப்படவில்லை. தஸூன் சாணக்க ஆட்டமிழக்கமால் ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இறுதி ஓவரில் வான வேடிக்கை காட்டி ஓட்டங்களை அதிகரித்துக் கொடுத்தார்.
பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் மெஹ்தி ஹசன் மிக அபாரமாக பந்துவீசினார். 4 ஓவர்களில் 11 ஓட்டங்களை வழங்கி 4 விக்கெட்களை கைப்பற்றினார். இரண்டாவது தடவை 4 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். சொரிபுல் இஸ்லாம், முஸ்டபைசூர் ரஹ்மான், ஷமீம் ஹொசைன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் அணி முதற் பந்திலேயே விக்கெட்டை இழந்தது. அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ரன்ஷிட் ஹசன், லிட்டோன் டாஸ் ஜோடி 74 ஓட்டங்களை பகிர்ந்து வெற்றி வாய்ப்பபை தம் பக்கமாக இழுத்தனர். லிட்டோன் டாஸ் 32(26) ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரன்ஷிட் ஹசன் ஆட்டமிழக்காமல் 73(47) ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியின் வெற்றியினை உறுதி செய்தார். இறுதியில் பங்களாதேஷ் அணி16.3 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இலங்கை அணியின் பந்துவீச்சில் நுவான் துஷார, கமிந்து மென்டிஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.