பிரதமரைச் சந்தித்த உலக நீர்விளையாட்டு மற்றும் ஆசிய ஒலிம்பிக் சபையின் பணிப்பாளர் நாயகம்!

உலக நீர்விளையாட்டு மற்றும் ஆசிய ஒலிம்பிக் சபையின் பணிப்பாளர் நாயகம் கேப்டன் ஹுசைன் அல் முசல்லம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு, செப்டம்பர் 8 அன்று பிரதமரின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது, விளையாட்டு வீரர்களின் மேம்பாடு மற்றும் விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்கு அரசாங்கத்திற்கும் விளையாட்டுத் துறைக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை கேப்டன் ஹுசைன் அல் முசல்லம் வலியுறுத்தினார். மேலும், தற்போதுள்ள விளையாட்டுச் சட்டம் தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதின் அவசியத்தையும், தேவையான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டியதன் தேவையையும் எடுத்துரைத்தார்.

அப்போது, பாடசாலை மாணவர்களிடமும் சமூகத்திலும் விளையாட்டை ஊக்குவிப்பதன் மூலம் நன்னடத்தையும் ஆரோக்கியமும் வளரும் என்று பிரதமர் கூறினார்.

அத்தோடு, விளையாட்டுத் துறையின் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள், விளையாட்டு வீரர்களுக்குப் பாதுகாப்பு அளித்தல், குறிப்பாகப் பெண்களின் பங்கேற்பில் கவனம் செலுத்துதல் போன்றவற்றில் அரசாங்கம் முன்னுரிமை அளித்து முதலீடு செய்து வருவதாகவும் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் கல்வி அமைச்சகத்துடன் இணைந்து நீர்வழி விளையாட்டுத் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

இந்தச் சந்திப்பில், தேசிய ஒலிம்பிக் குழுவின் (NOC) தலைவர் சுரேஷ் சுப்ரமணியமும் கலந்துகொண்டதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version