இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையில் நேற்று (30.01) 19 வயதிற்குற்பட்ட உலகக்கிண்ணத்தின் 32 ஆவது போட்டியாக புலவாயோவில் நடைபெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்களினால் வெற்றி பெற்று அரை இறுதிப்போட்டிக்குள் செல்லும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்கா 19 வயதிற்குற்பட்ட அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 261 ஓட்டங்களை பெற்றது. தென்னாபிரிக்கா அணியின் துடுப்பாட்டத்தில் ஜொரிச் வன் ஸ்கல்க்விக் 116(130) ஓட்டங்களையும், அட்னான் லகடியன் 46(57) ஓட்டங்களையும், பவுல் ஜேம்ஸ் ஆட்டமிழக்காமல் 37(36) ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை அணியின் பந்து வீச்சில் விக்னேஷ்வரன் ஆகாஷ் 4 விக்கெட்களையும், கவிஜ கமகே 2 விக்கெட்களையும், சாமிக ஹீனடிகள 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இலங்கை 19 வயதிற்குட்பட்ட அணி 46 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 265 ஓட்டங்களை பெற்று போட்டியை வெற்றி பெற்றது. இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் விரான் சமுதித 110(94) ஓட்டங்களையும், செனுஜ வெகுணகொட 48(63) ஓட்டங்களையும், விமத் தின்சர 32(38) ஓட்டங்களையும் பெற்றனர்.
தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில் மைக்கல் க்றுயிஸ்கம்ப், கார்ன் போதா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், பவுல் ஜேம்ஸ் 1 விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக விரான் சமுதித தெரிவு செய்யப்பட்டார்.
அவுஸ்திரேலியா அணி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் அரை இறுதிக்கு தெரிவாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள இன்றைய போட்டியில் (31.01) ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால் ஆப்கானிஸ்தான் அணி அரை இறுதிக்கு தெரிவாகும். அயர்லாந்து அணி வெற்றி பெற்றால் இலங்கை அணி அரை இறுதிக்கு தெரிவு செய்யப்படும்.