”பிரிவினைகளை சீர் செய்து இலங்கையின் விளையாட்டை மேம்படுத்துவதே நோக்கம்” – ஷிரந்த பீரீஸ் தெரிவிப்பு.

ஒலிம்பிக் கொமிட்டி மற்றும் விளையாட்டு சங்கங்களுக்குள் பிரிவினை காணப்படுகிறது. அதனை சீர் செய்து அனைவரையும் இணைத்து இலங்கையின் விளையாட்டை மேம்படுத்துவதே தனது நோக்கம் என ஒலிம்பிக்கல் குழுவின் தலமை பதவிக்கு போட்டியிடும் ஷிரந்த பீரீஸ் தெரிவித்துள்ளார்.

வெளிப்படை தன்மையுடன் சகல விடயங்களையும் செயற்படுத்த வேண்டும். கிடைக்கும் பணத்தில் பெரும் பகுதி வழக்குகளுக்கு செலவாகின்றன. அவற்றை கலந்துரையாடல்கள் மூலம் நிவர்த்தி செய்து உரிய தீர்வுகளை பெற வேண்டும் எனவும் மேலும் அவர் தெரிவித்துளார்.

மிகவும் மதிக்கப்படுகின்ற தொழிலதிபரும், விளையாட்டுத்துறை நிர்வாகியும், இலங்கை தேசிய ஒலிம்பிக் சபையின் தற்போதைய துணைத் தலைவருமான ஷிரந்த பீரிஸ் அவர்கள் தேசிய ஒலிம்பிக் சபையின் தலைமைப்பதவிக்கு போட்டியிடுவது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். நிர்வாக ஆட்சியை வலுப்படுத்தி, விளையாட்டுச் சம்மேளனங்களுக்கு இடையில் ஐக்கியத்தை வளர்த்து, சர்வதேச அரங்கில் இலங்கையின் விளையாட்டுத் துறை பெறுபேறுகளை சிறப்பிக்கும் தெளிவான மற்றும் நடைமுறைச் சாத்தியமான தேர்தல் ஆணையையும் அவர் முன்வைத்துள்ளார்.

தொழில்ரீதியாக நான்கு தசாப்த காலத்திற்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ள ஷிரந்த பீரிஸ் அவர்கள் ரூபா 6 பில்லியனுக்கும் மேற்பட்ட வருடாந்த விற்பனைப்புரள்வைக் கொண்டுள்ள ஒரு முன்னணி மருந்து வகை நிறுவனமான Mega Pharma நிறுவனங்கள் குழுமத்தின் உரிமையாளராவார். அவர் தனது தொழில்வாழ்வில் வலுவான தொழிற்பாட்டு ஒழுக்கம், நிதியியல் தலைமைத்துவம், மற்றும் பாரியளவில் நிறுவனங்களைக் கட்டியெழுப்பி, தலைமை வகிக்கும் ஆற்றல் ஆகியவற்றை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளில் இரு வணிக முகாமைத்துவ முதுகலைப் பட்டங்களை (MBA) அவர் பெற்றுள்ளதுடன், அவருடைய மூலோபாய மற்றும் தலைமைத்துவத்தின் வலுவான அத்திவாரத்திற்கு இது மேலும் வலுச் சேர்க்கின்றது.

“என்னைப் பொறுத்தவரையில் தலைமைத்துவம் என்பது வெறும் வாக்குறுதிகளை வழங்குவது என்பதல்ல, சிறந்த பலனைத் தருகின்ற கட்டமைப்புக்களைத் தோற்றுவிப்பதாகும். தொடர்ச்சியாகவும், நியாயமான வழியிலும் பலனளிக்கின்ற கட்டமைப்புக்களைத் தோற்றுவிப்பது சார்ந்தது,” என்று பீரிஸ் அவர்கள் குறிப்பிட்டார்.

வணிக முயற்சிகளுக்கு அப்பால், உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் விளையாட்டுத்துறை நிர்வாகம் ஆகியவற்றினூடாக இலங்கையில் விளையாட்டுத் துறையில் நீடித்த பலனுக்கும் ஷிரந்த அவர்கள் வழிவகுத்துள்ளார். நுவரெலியா, கட்டுக்குருந்தை, மற்றும் பயாகலை ஆகிய இடங்களில் Clay Target Shooting Club of Colombo மூலமாக சுடுதிறன் பயிற்சித்தளங்களை தானே முதலீடு செய்து ஆரம்பித்து, மேம்படுத்தியுள்ளதுடன், இவ்விளையாட்டில் சர்வதேச தராதரங்கள் மற்றும் அனைவருக்கும் வாய்ப்புக் கிடைப்பதை விரிவுபடுத்தும் வகையில் வசதிகளை ஏற்படுத்தியுள்ளார்.

2015 ல் இலங்கை தேசிய சுடுதிறன் விளையாட்டு சம்மேளனத்தின் முதலாவது பொதுமகன் அடிப்படையிலான தலைவராக அவர் தெரிவு செய்யப்பட்டார். 2025 வரையான அவர் இப்பதவியை வகித்த காலப்பகுதியில் சுமார் 200 பேர் இவ்விளையாட்டுத்துறையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலைமையை 7,500 க்கும் மேற்பட்ட இளைஞர்களைக் கொண்ட பெரும் எண்ணிக்கை கொண்ட வீரர்களாக அதிகரிக்கச் செய்து, இச்சம்மேளனம் கணிசமான வளர்ச்சிக்கு முகங்கொடுத்துள்ளது. அவரது தலைமைத்துவத்தின் கீழ் இளைஞர் மேம்பாட்டுக்கு தெளிவான கவனம் செலுத்தப்பட்டதுடன், அதன் பலனாக 16 வயதிற்கு உட்பட்ட வீரர்கள் ஆசிய மட்டப் போட்டிகளில் பதக்கங்களை வென்று இந்நாட்டுக்கு வெற்றியை ஈட்டிக்கொடுத்துள்ளனர்.

“கட்டமைப்பு, வசதி வாய்ப்புக்கள், மற்றும் இளைஞர் மீது முதலீடு செய்வது சிறந்த பலனை ஈட்டித்தரும் என்பதை நாம் நிரூபித்துள்ளோம். இதே அணுகுமுறையை இலங்கையில் அனைத்து விளையாட்டுக்களுக்கும் நாம் பிரயோகிக்க முடியும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

ஷிரந்த அவர்கள் தற்போது இலங்கை தேசிய ஒலிம்பிக் சபையின் துணைத் தலைவராக சேவையாற்றி வருவதுடன், ஆசிய சுடுதிறன் சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழு அங்கத்தவர், சர்வதேச சுடுதிறன் விளையாட்டுச் சம்மேளனத்தினுள் மேம்பாட்டு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கின்ற சபை அங்கத்தவர் அடங்கலாக சர்வதேச விளையாட்டுச் சபைகளில் பல்வேறு பதவிகளை வகித்து வருகிறார். பாரியளவிலான தேசிய செயற்திட்டங்களுடன் இணைந்து தொழிற்பட்டு, தொடர்புட்ட அரச தரப்பினருடன் நெருக்கமாக இணைந்து உழைக்கும் ஆற்றலைப் பிரதிபலிக்கும் வகையில் கொழும்பிலுள்ள தாமரைத் தடாகத்தின் தலைவராகவும் அவர் சேவையாற்றி வருகின்றார்.

விளையாட்டுத்துறையில் அவரது பயணம் 12 வயதில் ஆரம்பித்தது. அவர் தனது தந்தையின் வழிகாட்டலின் கீழ் காற்றழுத்தத் துப்பாக்கி சுடும் பயிற்சியை ஆரம்பித்தார். 2000 ல் தெற்காசிய சுடுதிறன் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்த அவர் அணி மட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும், தனிநபராக வெண்கலப் பதக்கத்தையும் வென்று சர்வதேச மட்டப் போட்டியின் ஆழம் குறித்த நேரடி அனுபவத்தைப் பெற்றுக்கொண்டார்.

தான் போட்டியிடவுள்ளமை குறித்த அறிவிப்பை வெளியிட்ட பீரிஸ் அவர்கள், இலங்கையில் விளையாட்டுத்துறை பாரிய திருப்புமுனைமிக்க தருணமொன்றில் காணப்படுவதாகவும் அதற்கு வலுவான கட்டமைப்புக்கள், மகத்தான அளவில் ஐக்கியம், மற்றும் வெளிப்படையான நிர்வாக ஆட்சி தேவையென்பதையும் சுட்டிக்காட்டினார்.

குறித்த நோக்கத்திற்காக ஐக்கியம் கொண்ட, தொழிற்பாட்டில் வெளிப்படையாகச் செயல்படுகின்ற, மற்றும் வாய்ப்புக்களை நியாயமான வழியில் வழங்குகின்ற தேசிய ஒலிம்பிக் சபையைக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்தவுள்ளதாக அவர் தனது ஆணையில் குறிப்பிட்டுள்ளார். தீர்மானங்கள் குறித்து காலாண்டு அடிப்படையில் வெளிப்படையான அறிவிப்புக்கள், நிதி வசதி மற்றும் அனுசரணை வாய்ப்புக்களுக்கும் பகிரங்கமான வரவுசெலவு அறிக்கையிடல் கட்டமைப்பு, திறமை அடிப்படையில் தகைமை பெறும் கட்டமைப்புக்கள், விளையாட்டுவீரர்களைப் பாதுகாப்பதில் வலுவான பொறிமுறைகள், மற்றும் விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கு கட்டமைக்கப்பட்ட திறன் மேம்பாடு ஆகியவை தனது முன்னுரிமைகளில் அடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஒலிம்பிக் இல்லத்தில் முறையான கருத்துப் பின்னூட்டப் பொறிமுறையொன்றை அறிமுகம் செய்தல், தெளிவாக வரையறுக்கப்பட்ட பதவிகள் மற்றும் பணிப்பொறுப்புக்கள் மூலமாக பொறுப்புக்கூறலை மேம்படுத்தல், விளையாட்டு அமைச்சு மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியவற்றுடன் நெருக்கமான ஒத்துழைப்பு ஆகியன குறித்தும் அவர் தனது ஆணையில் முன்மொழிந்துள்ளார்.

“இலங்கையில் திறமைகொண்ட விளையாட்டு வீரர்களுக்குப் பஞ்சம் கிடையாது. அந்த திறமைசாலிகளை ஒன்றுசேர்த்து, தொடர்ச்சியாக ஆதரவளித்து, வெற்றியீட்டுவதற்கு நியாயமான வழிமுறைகளை ஏற்படுத்தும் போதிய கட்டமைப்புக் கிடையாது,” என்று பீரிஸ் குறிப்பிட்டார். “அனைவரையும் ஐக்கியப்படுத்துகின்ற, நேர்மையுடன் தொழிற்படுகின்ற, ஒட்டுமொத்த தேசமும் பக்கபலமாக நிற்பதற்கு வழிவகுக்கின்ற பெறுபேறுகளை வழங்கும் நிறுவனங்களைக் கட்டியெழுப்புவதிலேயே அதன் வெற்றி தங்கியுள்ளது.”

தொழிலதிபர், விளையாட்டுத்துறை நிர்வாகி, மற்றும் தேசிய விளையாட்டுவீரர் என்ற ரீதியில் தனித்துவமான அனுபவ இணைப்புடன், நடைமுறைரீதியில் எடுத்த காரியத்தை நிறைவேற்றுதல், நிறுவனரீதியான வலிமை, மற்றும் நீண்டகால அடிப்படையிலான நற்பலன் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் போட்டியாளராக ஷிரந்த பீரிஸ் அவர்கள் தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.

 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version