”விசாரணைகள் தற்போதைய அரசின் கீழ் முன்னேற்றம் பெற்றுள்ளது” பேராயர் தெரிவிப்பு!

2019ம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு உட்பட்ட விசாரணைகள் தற்போதைய அரசின் கீழ் முன்னேற்றம் காணப்படுவதாக கொழும்பு உயர் மறைமாவட்ட பேராயர் அதிமேதகு கருதினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

தாக்குதல்களின் ஏழாவது ஆண்டு நினைவாக இன்று (21.04) காலை நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் உரையாற்றிய அவர், சில தரப்புகள் இந்த விசாரணைகளைத் தடை செய்ய முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தாக்குதல்களுக்கு தொடர்பாக தங்களின் கடமைகளை நிறைவேற்றத் தவறிய ஜனாதிபதிகள், பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் மற்றும் பொலிஸார் உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்திருந்த போதிலும், சட்ட மா அதிபர் மற்றும் அவரது திணைக்களம் நடவடிக்கையை தாமதப்படுத்தியதற்கு அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

தாக்குதலுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடைய அனைவரையும், அவர்களின் பதவி எதுவாக இருந்தாலும், குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.

ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரியை கண்டறிதல் என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் நீதி வழங்குவதையும், அவர்களின் அடிப்படை உரிமைகளை நிலைநிறுத்துவதையும் உறுதி செய்வதாகும்,” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் வழங்கிய வாக்குறுதியின்படி, உண்மை காலப்போக்கில் மறைய அனுமதிக்கமாட்டோம் என்று கூறியிருந்த ஜனாதிபதி அவர்கள் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என பேராயர் கேட்டுக்கொண்டார்.

மேலும், 2019 ஈஸ்டர் தாக்குதல்களின் உண்மையை வெளிக்கொணரும் வகையில் முழுமையான மற்றும் உண்மையை அடிப்படையாகக் கொண்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தற்போதைய முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.

இறுதியாக, உண்மை வெளிப்படும் வரை தங்களது நீதி பெறும் போராட்டம் முடிவுக்கு வராது என பேராயர் அதிமேதகு கருதினால் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தினார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version