யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில் காணித் தகராறு தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா சம்பந்தப்பட்ட ஒரு மோதல் சம்பவம் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இச்சம்பவம், குறித்த நிலத்தின் உரிமை தொடர்பாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினரும், மேலும் ஒரு பெண் உட்பட மற்றொரு தரப்பும் அந்த நிலத்தின் மீது உரிமை கோரியுள்ளனர்.
கடந்த 25ம் திகதி, தனது பூர்வீக நிலமாகக் கூறப்படும் பகுதியில் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, இரு ஆண்களும் ஐந்து பெண்களும் அடங்கிய குழு அந்த இடத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் அந்த நிலப்பகுதியின் உரிமையை வலியுறுத்தியதன் பின்னர் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
மோதல் தீவிரமடைந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் கையில் துப்பாக்கியுடன் காணப்பட்டார் என்பதும் காணொளியில் பதிவாகியுள்ளது.
இந்த காணொளி சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர் தனது முகப்புத்தக நேரலை மூலம் விளக்கம் அளித்திருந்தார். அவர் கூறுகையில், அந்தக் குழு நிலப்பகுதியில் நுழைந்து தன்னுடைய பணிகளைத் தடுத்ததுடன், தன்னை நோக்கி கற்கள் எறியப்பட்டதாகவும் தெரிவித்தார்.
தன்னுடைய உயிர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால், பாதுகாப்பு அமைச்சகம் வழங்கிய தனிப்பட்ட துப்பாக்கியை பயன்படுத்தி நிலைமையை கட்டுப்படுத்தியதாகவும், யாருக்கும் சேதம் ஏற்படுத்தும் நோக்கம் இல்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.