ஆசிய கடற்கரை விளையாட்டு விழாவில் தாய் நாட்டிற்கு பெருமை சேர்த்த வீரர்கள் தாயகம் திரும்பினர்!

சீனாவின் சான்யாவில் நடைபெற்ற 6வது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் தடகளப் பிரிவில் 4 பதக்கங்களை வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்த தடகளக் குழுவினர் (27.04) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இந்தத் தொடரில் இலங்கை சார்பில் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் 3 வெண்கலப் பதக்கங்களையும் வெல்ல எமது வீர வீராங்கனைகள் சமர்த்தாகச் செயற்பட்டனர்.

பதக்கம் வென்றவர்களின் விபரங்கள்
இஷாரா சமன்மலி: பெண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் 5.87 மீற்றர் தூரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். ஆசிய கடற்கரை விளையாட்டு வரலாற்றில் தடகளப் பிரிவில் இலங்கை வென்ற முதல் வெள்ளிப் பதக்கம் இதுவாகும்.

சஷிகலா லங்காத்திலக: பெண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் 5.83 மீற்றர் தூரம் பாய்ந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

ஜயத்ர சம்பத் மிராண்டா: ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் 7.37 மீற்றர் தூரம் பாய்ந்து வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தார்.

ஆண்களுக்கான 4x60m அஞ்சலோட்டக் குழு: மனுஜ பிரபாஷ், மலித் தமேல், மலித் தருஷான் மற்றும் சந்துன் தியலவத்த ஆகிய வீரர்களைக் கொண்ட குழுவினர் 27.57 வினாடிகளில் போட்டியை நிறைவு செய்து நாட்டிற்கு வெண்கலப் பதக்கத்தை பெற்றுக்கொடுத்தனர்.

வெற்றி வீரர்களை வரவேற்பதற்காக விளையாட்டு மேம்பாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. எஸ். அச்சுதன் மற்றும் இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் (NOC) அதிகாரிகள் கலந்துகொண்டனர். தேசிய ஒலிம்பிக் குழுவின் பொதுச் செயலாளர் திரு. ரிஃப்டி பாமி, தடகள ஆணைக்குழுவின் தலைவர் ஒலிம்பியன் திரு. நிலுக கருணாரத்ன உள்ளிட்டோர் இவ்வைபவத்தில் கலந்துகொண்டு வீரர்களை ஊக்குவித்தனர்.

இந்த வெற்றியானது இலங்கையின் கடற்கரை தடகளத் துறையில் ஒரு புதிய மைல்கல்லாகும். மட்டுப்படுத்தப்பட்ட வசதிகளுக்கு மத்தியிலும் சர்வதேச ரீதியில் தேசியக் கொடியை உயரப் பறக்கச் செய்த எமது வீரர்களுக்கு முழு தேசத்தினதும் கௌரவம் உரித்தாகட்டும்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version