ஹட்டன் – டிக்கோயா பகுதியில் இடம்பெற்ற வயோதிப தம்பதியினர் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை எதிர்வரும் ஜூன் 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர் இன்று (24.05) ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
டிக்கோயா பிரதான வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கடந்த வியாழக்கிழமை (21.05) 85 வயதுடைய எஸ். காளிமுத்து சத்திவேல் மற்றும் அவரது மனைவி 82 வயதுடைய சகுந்தலாதேவி ஆகியோர் கொலை செய்யப்பட்டிருந்தனர். இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
சம்பவத்தையடுத்து, குறித்த வர்த்தக நிலையத்திற்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தினர்.
அதன் பின்னர், சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் பிரதான சந்தேகநபர், பொகவந்தலாவ – பெற்றசோ பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்து இருந்த நிலையில் கடந்த 23 ஆம் திகதி மாலை கைது செய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.