இலங்கை ரக்பி ‘வகை 3’ (Tier 3) தேசிய அணியில் புதிதாக இணைந்த வீரர்கள் “மிஷன் ஒலிம்பிக்” திட்டத்தில் சேர்ப்பு!

இலங்கை ரக்பி ‘வகை 3’ தேசிய அணியில் புதிதாக இணைந்த வீரர்களுக்கான கொடுப்பனவு வழங்குதல் மற்றும் அவர்களை “மிஷன் ஒலிம்பிக்” (Mission Olympic) திட்டத்தில் உள்வாங்கும் நிகழ்வு இன்று (26ஆம் திகதி) இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சில் நடைபெற்றது.

கடந்த ஒரு வருட காலமாக உள்நாட்டு மற்றும் சர்வதேச ரக்பி விளையாட்டில் வெளிப்படுத்திய சிறந்த திறமைகளைக் கருத்திற் கொண்டு, இலங்கை தேசிய ரக்பி அணியின் ‘வகை 3’ அணிக்கு புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட திறமையான இளம் வீரர்களுக்கு இக்கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன. இதன்படி, இலங்கை ரக்பி அணியின் 21 வீரர்களுக்கு மாதாந்தம் தலா 135,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. அத்துடன், அண்மையில் நடைபெற்ற ‘Casa 7s’ ரக்பி தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற 16 பெண் ரக்பி வீராங்கனைகளுக்கு தலா 180,000 ரூபா ஊக்கத்தொகையும் இதன்போது வழங்கப்பட்டது. இக்கொடுப்பனவு ஒருமுறை மட்டும் வழங்கப்படும் விசேட கொடுப்பனவாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே அவர்களின் தலைமையில் விளையாட்டு அமைச்சின் டன்கன் வைட் மண்டபத்தில் இக்கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இங்கு உரையாற்றிய அமைச்சர் சுனில் குமார கமகே, பெரும் போராட்டத்திற்குப் பின்னரே ரக்பி சங்கம் மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு, ரக்பி விளையாட்டு இன்றைய நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.

தான் அமைச்சராகப் பொறுப்பேற்கும்போது நாட்டில் ரக்பி விளையாட்டு மிகவும் பரிதாபகரமான நிலையில் இருந்ததாகக் குறிப்பிட்ட அமைச்சர், நிலுவையில் இருந்த நீதிமன்ற வழக்குகளைத் தீர்த்து, ரக்பி சங்கத்தை அமைச்சின் தற்காலிக மேற்பார்வையின் கீழ் கொண்டுவந்து, புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தி, முறையான தேர்தலை நடத்தி புதிய அதிகாரிகளை நியமித்ததன் பின்னரே ரக்பி விளையாட்டை இந்த நிலைக்கு கொண்டு வர முடிந்ததாக விளக்கினார். இதன் பலனாக தற்போது இலங்கை ரக்பி அணி ஆசியாவில் 3வது இடத்தை பிடித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதுவரை தடகள வீரர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த “மிஷன் ஒலிம்பிக்” திட்டத்தில், முதன்முறையாக ஒரு குழு விளையாட்டாக ரக்பி வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர் என்றும், எதிர்காலத்தில் சர்வதேச அளவில் திறமைகளை வெளிப்படுத்தும் மேலும் பல குழு விளையாட்டுகளை இதனுடன் இணைத்து வீரர்களை ஊக்குவிக்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அமைச்சு என்ற ரீதியில் வீரர்களை ஊக்குவிப்பதற்கும் அவர்களின் விளையாட்டை ஒரு தொழில்முறை சார்ந்ததாக மாற்றுவதற்கும் அதிகபட்ச பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்தி விளையாட்டிற்காக தங்களின் அதிகபட்ச அர்ப்பணிப்பை வழங்குவது வீரர்களின் பொறுப்பாகும் என்றும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.

வெற்றிக்காக மாத்திரம் போட்டியிடுவது தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை அல்ல என்றும், ஒரு விளையாட்டு கலாசாரத்திற்குள் அனுபவங்களைப் பெற்று வெற்றியை அடைவதே அரசாங்கத்தின் கொள்கை என்றும் அமைச்சர் கூறினார்.

தேசிய அளவிலான விளையாட்டு வீரர்களுக்கு அரச வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான முறையான பொறிமுறையொன்றை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும், அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சின் செயலாளர் அருண பண்டார, விளையாட்டு மேம்பாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஐ. பி. விஜேரத்ன உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள், இலங்கை ரக்பி சங்கத்தின் தலைவர் பவித்ர பெர்னாண்டோ மற்றும் ரக்பி விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பலரும் கலந்துகொண்டனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version