கொழும்புக்கு வருகை தரும் இந்திய கடற்படை கப்பல் INS ஷர்டா

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘ஐ.என்.எஸ். ஷார்தா’ (INS Sharda) என்ற சுகன்யா வகை கடல்சார் கண்காணிப்பு கப்பல், செயற்பாட்டு தேவைகள் மற்றும் பொருட்கள் மாற்று நடவடிக்கைகளுக்காக 2026 ஜூன் 10 முதல் 13 ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளது.

இலங்கை இராணுவத்தின் ஐக்கிய நாடுகள் சபை அமைதிகாக்கும் பணிக்கான பங்களிப்பிற்காக இந்திய இராணுவத்தினால் வழங்கப்படும் பொருட்கள் இக்கப்பல் மூலம் கொண்டு வரப்படவுள்ளன. குறித்த பொருட்கள் ஜூன் 16 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சில் நடைபெறும் நிகழ்வொன்றில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளன.

கப்பலின் கட்டளை அதிகாரி கமாண்டர் கார்த்திக் சச்தேவா, இலங்கை கடற்படையின் மேற்கு கடற்படை பிராந்தியத் தளபதி ரியர் அட்மிரல் எஸ்.ஜே. குமாரவை சந்திக்கவுள்ளார். மேலும், இந்திய மற்றும் இலங்கை கடற்படை வீரர்களுக்கிடையில் தொழில்முறை மற்றும் விளையாட்டு ரீதியான பரஸ்பர தொடர்பு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இந்திய கடற்படை மற்றும் இலங்கை கடற்படை பணியாளர்கள் இணைந்து யோகா பயிற்சி அமர்வொன்றிலும் பங்கேற்கவுள்ளனர். உடல், மன மற்றும் ஆன்மீக நலன்களை மேம்படுத்துவதில் யோகாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதே இதன் நோக்கமாகும்.

இந்திய கடற்படை கப்பல்களின் இலங்கை விஜயங்கள், இரு நாடுகளின் நட்புறவு மற்றும் கடற்படை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் இடம்பெற்று வருகின்றன. இது இந்தியாவின் “Neighbourhood First” கொள்கைக்கும், இந்திய பிரதமரின் “MAHASAGAR” (Mutual and Holistic Advancement for Security and Growth Across Regions) தொலைநோக்கு எண்ணக்கருவிற்கும் அமைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply