விழிப்புணர்வு உணவு முறைமைகள் பற்றிய உலக உச்சிமாநாட்டில் (Global Conscious Food Systems Summit – GCFSS) பங்கேற்பதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்ற பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, 2026 ஆகஸ்ட் 31ஆம் திகதி பூட்டானின் பாரோ சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.
பிரதமரை வரவேற்பதற்காக பூட்டான் பிரதமர் விமான நிலையத்திற்கு வருகை தந்ததுடன், பூட்டானின் வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வர்த்தக அமைச்சர், கல்வி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர், பங்களாதேஷுக்கான இலங்கைத் தூதுவர், இலங்கைக்கான பூட்டான் தூதுவர், அத்துடன் பூட்டான் அரசாங்கம் மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) சிரேஷ்ட அதிகாரிகள் பிரதமரை அன்புடன் வரவேற்றனர்.
விழிப்புணர்வு உணவு முறைமைகள் பற்றிய உலக உச்சிமாநாடு 2026 ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 04ஆம் திகதி வரை பூட்டானில் நடைபெறவுள்ளது. நிலைபேறான, விழிப்புணர்வுமிக்க மற்றும் மீளுற்பத்தி உணவு முறைமைகளை மேம்படுத்துதல், அத்துடன் விழுமியங்கள், கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் உளவியல் ரீதியான மாற்றம் ஆகிய விடயங்களில் இம்மாநாடு கவனம் செலுத்தவுள்ளது.
“உணவு முறைமைகள் மாற்றத்தின் இதயத்தை இயங்கச்செய்தல்” (Activating the Heart of Food Systems Transformation) எனும் தொனிப்பொருளில் பூட்டான் அரசாங்கம், விழிப்புணர்வு உணவு முறைமைகள் கூட்டணி (CoFSA) மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் (UNDP) ஆகியன இணைந்து இந்த உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன.
2026 செப்டம்பர் 01ஆம் திகதி டுங்கார் ட்சோங்கில் (Dungkar Dzong) நடைபெறவுள்ள உச்சிமாநாட்டின் ஆரம்பப் பொது அமர்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொள்ளவுள்ளதுடன், “நெருக்கடிகளை எதிர்கொள்வதற்காக விழிப்புணர்வுடன் எழுச்சி பெறுதல்” (Rising to the Moment: Igniting Consciousness to Address the Polycrisis) எனும் தலைப்பில் பிரதம உரையையும் ஆற்றவுள்ளார்.
மேலும், இவ்விஜயத்தின்போது பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பூட்டான் பிரதமர் மற்றும் கல்வி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சருடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தவுள்ளார். அத்துடன், உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளும் ஐக்கிய நாடுகளின் முன்னாள் பொதுச்செயலாளர் உள்ளிட்ட வெளிநாட்டு உயர்மட்ட பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.
நிலையான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் மக்கள் மையப்படுத்தப்பட்ட உணவு முறைமைகளை உருவாக்குவது தொடர்பில் இலங்கையின் கருத்துகள், அனுபவங்கள் மற்றும் நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வதற்கும், இலங்கைக்கும் பூட்டானுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவும் நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும் இந்த உச்சிமாநாடு முக்கியமானதொரு வாய்ப்பாக அமையும்.