தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கிடையிலான கூட்டு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 21ஆம் திகதியை குறித்த ஒப்பந்தத்தில் கட்சி தலைவர்கள் கையொப்பம் இடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்சி தலைவர்கள் கையெழுத்திடவுள்ள தமிழ் – முஸ்லிம் கூட்டு கட்சிகளின் பொது ஆவணத்தில் உளளடக்கம் தொடர்பிலும், கைச்சாத்திடுவது தொடர்பிலும் கட்சிகள் மத்தியில் கலந்துரையாடல் நடைபெற்று வருவதாகம், இன்றும் கட்சி தலைவர்களுக்கிடையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மேலும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உத்தேசமாக தமிழ் முற்போக்கு கூட்டணி கையெழுத்திடும் அதேவேளை, கூட்டணியின் பங்காளி கட்சி தலைவர்களும், தனித்தனியேயும் கையெழுத்திட வேண்டும் என, தான் வலியுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டாகவும், பங்காளி கட்சி தலைவர்கள் தனித்தனியாகவும் கையெழுத்து இடுவார்கள் எனவும் தான் மேலும் நம்புவதாக தெரிவித்த மனோ எம்.பி, முஸ்லிம் மக்கள் சார்பாக , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு மேலதிகமாக, ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் உள்வாங்கப்பட வேண்டும் என்ற முன்மொழிவை அனைத்து கட்சி தலைவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். ஆகவே அதுவும் நிகழும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எனினும் இது எதுவும் தேர்தல் கூட்டும் அல்ல என்பதையும் வலியுறுத்தும் அதேசமயம், இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் சார்பாக அனைவரும் மிகுந்த விட்டுக்கொடுப்புடன் செயற்படுவதாகவும், இதுவே தம்மை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் எனவும் மனோ எம்.பி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.