தமிழ் பேசும் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் கூட்டம் சற்று முன்னர் ஆரம்பமான நிலையில் தமிழ் – முஸ்லிம் கட்சிகளுக்கு இடையிலான பொது ஆவணத்தில் கையெழுத்திடுவது தொடர்பான மேலதிக கலந்துரையாடல்கள் தற்சமயம் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் குறித்த நிகழ்வுக்கான சபை தலைவராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நியமிக்க தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்.பி முன்மொழிந்தார். அதனை தொடர்ந்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வழிமொழிந்தார்.
அதற்கமைய ஏகமனதாக கூட்டத்தின் தலைவராக இரா.சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டார்.
தமிழ் – முஸ்லிம் கட்சி பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று (21/12) ஒப்பந்தாகும் என எதிர்பார்க்கப்படும் பொது ஆவணம் முன்னராகவே வரையப்பட்டுள்ள நிலையில், குறித்த ஆவணத்தின் மீது திருத்தங்களை மேற்கொள்ளல், உட்சேர்ப்புகளை இணைத்தல் போன்ற மேலதிக விசேட கலந்துரையாடல் ஒன்று சபையில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் மத்தியில் தற்சமயம் இடம்பெற்று வருகின்றது.
அதற்கமைய குறித்த கூட்டம் இன்று பிற்பகல் மீள ஆரம்பிக்கப்பட்டு பொது ஆவணம் கைச்சாத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த கூட்டத்தில் இம்முறை தமிழரசு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி கட்சி தலைவர் மாவை சேனாதிராசா கலந்துகொண்டுள்ளதுடன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன், டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்.பி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வருகை தராதமையால் அக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி கட்சியின் உபத்தலைவர் அமீர் அலி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் மக்கள் கூட்டணி தலைவர் சி.வி விக்னேஸ்வரன் எம்.பி, தமிழ் தேசிய கட்சி தலைவர் என்.ஸ்ரீகாந்தா, மலையக மக்கள் முன்னணி கட்சி தலைவர் இராதாகிருஷ்ணன் எம்.பி வருகை தராதமையால் அவருக்கு பதிலாக பேராசிரியர் விஜயச்சந்திரன் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம், தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர் உதயகுமார் எம்.பி ஆகியோர் இதில் பங்குபற்றியுள்ளனர்.
