ராகலை தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உயிரிழந்தமை தொடர்பான வழக்கு விசாரணை நேற்று (20/12) மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை காணொளி தொழில்நுட்பத்தினூடாக பார்வையிட்ட வலப்பனை நீதவான் டி.ஆர்.எஸ். ஜினதாச, குறித்த வழக்கை எதிர்வரும் 27ஆம் திகதி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் உயிர் தப்பிய நபர், ராகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு 72 நாட்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அடுத்த விசாரணைகளின் போது சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே நடைபெற்ற 5 விசாரணைகளின் போதும், கொரோனா பெருந்தொற்று காரணமாக சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவில்லை.
நுவரெலியா – ராகலை தோட்டம் முதலாம் பிரிவிலுள்ள தற்காலிக வீடொன்றில் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இரவு தீ பரவியதில், குறித்த வீட்டில் ஐவர் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
