அரசாங்கம் ஒருத்தரையொருத்தர் ஏவிவிட்டு அவர்களிடமிருந்து எதையாவது பறிக்கலாம் என்ற எண்ணத்தில் இருப்பதாக, தமிழ் மக்கள் கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
நேற்று (21/12) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “ஒரு ட்ரில்லியன் ரூபா பெறுமதியான உதவிகள் சீனாவிடமிருந்து கிடைக்கவுள்ளதாக எனக்குத் தகவல் கிடைத்தது. இந்தியா ஏற்கனவே சில உதவிகளை தருவதாக கூறி இருந்தார்கள்.
ஆகவே மாறி மாறி இரு நாடுகளும் செய்யும் உதவிகளை ஒப்பிட்டுக் காட்டி விளையாட போனால் ஒரு காலத்தில் இரண்டு பேரும் எங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடும் என்பதை இந்த அரசாங்கம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.
வடகிழக்கு தமிழர்களைப் பொறுத்தவரையில் இந்தியாவுடன் எங்களுக்கு கலாசார, மத ரீதியான பல தொடர்புகள் இருக்கின்றன. எங்களுடைய மீனவர்களை பார்த்தீர்களானால் தென்னிந்தியாவிலே திருமணம் செய்வார்கள். அதேபோல் தென்னிந்திய மீனவர்களும் இங்கு வந்து திருமணம் செய்வார்கள். அவர்களிடையே பல விதமான தொடர்புகள் இருக்கின்றன. அந்த தொடர்புகளை பாதிக்கும் வண்ணம் தற்போதைய சீன விஜயம் அமைந்து இருக்கின்றது. அதை நான் நல்ல விதத்தில் பார்க்கவில்லை.
சீனர்கள் மட்டுமல்ல யாராக இருந்தாலும் தமது சொந்த நன்மைக்காக தான் எங்கும் வருகை தந்து, எத்தகைய உதவிகளை வழங்குவார்கள். அந்த வகையில், சீனாவுடனும் இந்தியாவுடனும் நாம் மிகவும் கவனமாகவே எந்தவொரு நடவடிக்கைகளிலும் இறங்க வேண்டும்.இலங்கை அரசாங்கம் அவ்வாறு செய்வதாக எனக்கு தெரியவில்லை.
எதிர்காலத்தில் இலங்கை பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படும் என்பதே என்னுடைய கருத்தாகும்” என சி.வி விக்னேஸ்வரன் எம்.பி தெரிவித்தார்.
