கம்பாஹா மாவட்டம் – வத்தளை, மாபோல நகர சபையின் வரவு – செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, வத்தளை மபொல நகர சபையின் ஜனநாயக மக்கள் முன்னணியின் இணைத்தலைவர் சசிக்குமார் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் மீதான வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சக்தியினரின் 11 மேலதிக வாக்குகளால் திட்டம் நிறைவேறியதாக அவர் தெரிவித்தார்.
இம்முறை குறித்த வரவு – செலவு திட்டத்தில் வத்தளை நகர சபை எல்லைக்குட்பட்ட மக்களின் நலன்கருதி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஓராண்டு காலப்பகுதியில் பல்வேறு அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுக்க உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வத்தளை வாழ் மக்களின் நீண்டகால பிரதான பிரச்சினைகளில் ஒன்றான, இறந்தவர்களை தகனம் செய்வதற்கோ அல்லது நல்லடக்கம் செய்வதற்கோ மயானத்திற்கு செல்லும் வேளையில், மயானத்தில் இறுதி கிரியைகளை மேற்கொள்ள ஒரு குறித்தொதுக்கப்பட்ட இடமின்மை காணப்பட்டு வருவதால், அங்கு 20 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டின் கீழ், மண்டபம் ஒன்றை அமைத்து பொதுமக்களிடம் கையளிக்கும் திட்டமும் உள்வாங்கப்பட்டுள்ளதாக, மபொல நகர சபையின் ஜனநாயக மக்கள் முன்னணியின் இணைத்தலைவர் சசிக்குமார் தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் காலங்களில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனின் ஆலோசனையின் பேரில், வத்தளை நகர சபைக்குட்பட்ட தமது பிரதநிதிகளின் பற்றாக்குறை காரணமாக, புதிய உறுப்பினர்களை உள்வாங்கக்கூடிய புத்தகங்களை வகுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.