கடந்த 3 நாட்களில் 68 இந்தியர்கள் கைது

கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 68 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமையிலிருந்து (18/12) நேற்று முன்தினம் (20/12) வரையான 3 நாட்களில் இலங்கை கடல் எல்லையில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 68 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களின் 10 இழுவை படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன .

இந்த கைது நடவடிக்கையை தொடர்ந்து, இந்திய மக்களவையில் தமிழக உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தியவாறு சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பியதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையே இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு கோரி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், வெளிவிவகார அமைச்சருக்கு எழுதிய கடிதத்தை, திராவிட முன்னேற்ற கழக உறுப்பினர்கள் , இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கரை நேரில் சந்தித்து நேற்று (21/12) கையளித்தனர்.

இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரியும், இலங்கை கடற்படையை கண்டித்தும் இராமேஸ்வரத்தில் நேற்றுடன் (21/12) இரண்டாவது நாளாகவும் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை, நயினாதீவில் நேற்று முன்தினம் (20/12) இரவு கைது செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்கள் எதிர்வரும் ஜனவரி 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 2 படகுகள் கைப்பற்றப்பட்டிருந்தன.

அத்துடன், கடந்த சனிக்கிழமை இரவு இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 43 பேரும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, இலங்கை கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் தலைமன்னாரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (19/12) கைது செய்யப்பட்ட 12 மீனவர்களும் எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 3 நாட்களில் 68 இந்தியர்கள் கைது

Social Share

Leave a Reply