சூடான் நாட்டின் மேற்கு கொர்டோபன் மாகாணம் புஜா என்ற கிராமத்தில் சூடான் அரசாங்கம் நடாத்தி வரும் தங்கச்சுரங்கமொன்றில் சிக்கி 38 சுரங்க பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த தங்கச்சுரங்கம் கடந்த சில மாதங்களாக செயல்படாமல் மூடப்பட்டிருந்த நிலையில், அதற்குள் நேற்று முன்தினம் (28/12) அனுமதியின்றி நுழைந்த 50 க்கும் மேற்பட்டோர் தங்கம் எடுக்கும் முயற்சியில் சுரங்கத்தை தோண்டியுள்ளனர். இதன்போது சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் சுரங்கத்திற்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு, காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். சுரங்க விபத்தில் 38 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.