தேசிய விமான நிறுவனத்திற்கு உட்பட்ட இரு இலகுரக விமானங்கள் திடீரென தரையிறங்கிய சம்பவம் தொடர்பான அறிக்கை எதிர்வரும் இரு தினங்களில் வெளியிடப்படவுள்ளதாக சிவில் விமான சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன் பணிப்பாளர் நாயகம் டி அபேவிக்ரம இதனை தெரிவித்தார்.
குறித்த இரு சம்பவங்களினால் நாட்டில் தற்போது பயன்பாட்டில் உள்ள அனைத்து உள்ளூர் விமானங்களையும் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
உள்ளூர் விமான நிறுவனத்திற்கு உட்பட்ட இலகுரக விமானம் ஒன்று பயாகல கரையோர பகுதியில் திடீரென கடந்த 22ஆம் திகதி மாலை தரையிறங்கியது. இதில் இருந்த பயிற்சி ஆலோசகர் மற்றும் விமானிக்கு எந்தவித பாதிப்பும் இருக்கவில்லை.
இதேவேளை கடந்த 27ஆம் திகதி கட்டான கிம்புலாப்பிட்டி என்ற இடத்தில் இலகுரக விமானம் ஒன்று திடீரென தரையிறங்கியது. இதன்போது இதில் பயணித்த லெபனான் நாட்டவரும் விமானியும் சிறிது காயமுற்றனர்.
குறித்த சம்பவங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட உள்ளூர் விமான நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் தற்காலிகமாக இடைநிறுத்துவதாக சிவில் விமான சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.