வவுனியா, சாஸ்திரிகூழாங்குளம் கிராமத்தில் நேற்று(05.12) இரவு 11 மணியளவில்கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பரங்கியாறு வீதியிலுள்ள வீடொன்றுள் புகுந்த திருடர் கூட்டம் , வீட்டிலிருந்தவர்களை தாக்கிவிட்டு,பொருட்களை களவெடுத்து தப்பிச்சென்றுள்ளனர்.
10 பேரளவிலான திருடர் கூட்டம் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையிட முயற்சித்த போது அதனை தடுத்து மல்லுக்கட்டிய வீட்டின் உரிமையாளரை அந்த திருடர் கூட்டம் கடுமையக தாக்கியுள்ளது.
வீட்டு உரிமையாளர் கடும் வாள் வெட்டு காயங்களுடன் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் நடைபெற்ற வீட்டிலிருந்தவர்கள் அணிந்திருந்ச 10 பவுண் அளவிலான தங்க நகைகளும், நாற்பதாயிரம் ரூபா அளவிலான பணமும் திருடப்பட்டுள்ளதாக பாதிப்புக்குள்ளானவர்கள் தெரிவித்துள்ளனர்.
உரிமையாளர் கம்பி ஒன்றால் தாக்கியபோது, திருடர் கூட்டத்தில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயத்துடன் தாக்குதலுக்குள்ளான நபர் தப்பி சென்றுள்ளார்.
சம்பவம் நடைபெற்ற வீட்டில் பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் காணப்பட்ட போதும் அவற்றையும் திருடர்கள் தாக்கி, காயப்படுத்தியுள்ளதாகவும், தெரிவித்துள்ள கிராமவாசிகள் இது ஒரு துணிகர திருட்டு சம்பவம் என தெரிவிக்கின்றனர்.
சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்ற பொலிஸார், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.