வவுனியா பூவரசங்குளம் வைத்தியசாலையில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று நடைபெற்றன. இந்த நிலையில் அங்கே குழப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. வெளியே காத்துக்கொண்டிருந்த மக்கள் அதிக கூட்டமாகவும், போதிய இடைவெளியின்றியும் காணப்பட்டுள்ளனர்.
பின்னர் நுழைவாயிலை இடித்துக்கொண்டு உள்ளே செல்ல முற்பட்டதோடு, சிலர் உள்ளேயும் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் மக்கள் மத்தியில் தொற்றினை அல்லது தோற்று கொத்தணியினை உருவாக்கும் வாய்பினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நடைபெறுவதற்கான காரணங்களை ஆராய்ந்த போது, இந்த வேலைத்திட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு இடையில் சரியான தொடர்பாடல் இல்லாமல் போனதே முக்கிய காரணமாக அமைந்தது. எதிர்வரும் நாட்களில் இவ்வாறான சிக்கல்களை களைந்து செயற்பட்டால் மக்களுக்கு நல்ல சேவையினை வழங்க முடியும்.
மக்கள் இவ்வாறான தொற்று ஏற்படும் காலங்களில் யார் தவறிழைத்தாலும் பொறுமையாக இருந்து தங்களை பாதுகாக்க வேண்டியது அவர்களது பொறுப்பாகவும். இவ்வாறான செயற்பாடுகளினால் அந்த இடத்தில் கூடிய மக்களுக்கே தொற்று ஏற்படும் என்பதனை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.
இந்த விடயம் தொடர்பில் நாங்கள் வவுனியா மாவட்ட தொற்றியிலாளர் வைத்திய கலாநிதி செ.லவனை தொடர்பு கொண்டு கேட்ட போது “நாங்கள் தடுப்பூசிகள் ஏற்றும் நிலையங்களுக்கு 500 பேரை மட்டும் அனுப்புமாறும், அது தொடார்பான ஏற்பாடுகளை செய்து தர வேண்டுமென, பிரதேச செயலாளர் கமலதாசனுக்கு அறிவித்ததாகவும், அவர் கிராம சேவகர்களுக்கு தொடர்புபட்டவர்களோடு இணைப்பை ஏற்படுத்தி நேர்த்தியாக தடுப்பூசிகளை செயற்படுத்துமாறும் அறிவுறுத்தியதாக தெரிவித்தார்.
பம்பைமடு கிராமசேவகர் குறித்த வீடியோ காட்சியில் காணப்படும் நிலையில் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது தனது பிரிவிலிருந்து 400 பேரை கோரியதாகவும், தான் 300 பேரை ஏற்பாடு செய்ததாகவும், அதில் 286 பேர் வருகை தந்ததாகவும் தான் வரிசை இலக்கத்தினை வழங்கி 100 பேர் 1 மணித்தியாலத்துக்கு என்ற அடிப்படையில் மக்களை தயார் செய்ததாகவும், அதன் ஒழுங்கில் அவர்கள் வந்ததாகவும் தெரிவித்தார்.
ஆனால் செக்கடிபிலவு கிராம சேவையாளர் பிரிவிலிருந்து வரிசை இலக்கமில்லாமல் வருகை தந்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார். அத்தோடு தான் வழங்கிய வரிசை இலக்கம் தேவையில்லை எனவும், வைத்தியசாலையில் வழங்கப்படும் இலக்கத்தின் படியே உள்ளெடுக்கப்படுமெனவும், தன்னை உள்ளெடுக்கும் பணியில் ஈடுபடவேண்டாமென அங்கே கடமை புரியும் தாதி ஒருவர் தெரிவித்த நிலையில் தான் அந்த இடத்திலிருந்து ஒதுங்கியதாகவும் அவர் தெரிவித்தார். செக்கடிபிலவு கிராம சேவையாளரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
அதன் பின்னரே இந்த குழப்ப நிலைகள் ஏற்பட்டதாகவும் சரியான தொடர்பாடல்கள் மற்றும் ஏற்பாடுகள் இல்லாமல் போனது இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணமெனவும் அவர் தெரிவித்தார்.இந்த குழப்பத்தின் போது அண்ணளவாக நூறுக்கு சற்றும் அதிகமானவர்களே காணப்பட்டனர் என அவர் மேலும் தெரிவித்தார். அத்தோடு மக்களை உள்ளனுப்பும் பணிகள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டால் சுகாதார துறையினருக்கு தொந்தரவு இல்லாமல் தாங்கள் அதனை சீராக செய்வோம் எனவும் கூறினார்.
இந்த சம்பவத்தினை அங்கே இருந்த நபர் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து ஊடகவியலாளர் கார்த்திக்கு அனுப்பியுள்ளார். அதனை அவர் முகப் புத்தத்தில் பதிவேற்றி தமக்கு அறிய செய்தமைக்கு வவுனியா மாவட்ட தொற்றுயிலாளர் வைத்திய கலாநிதி செ.லவன் கார்த்திக்கு நன்றியை எமது ஊடகத்தினூடக தெரிவித்தார். இது போன்று நல்ல செயற்பாடுகளை அனைவரும் செய்ய வேண்டுமென அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.