ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இருந்து வெளியேறினால் பொதுக் கூட்டணியொன்றை உருவாக்கி எதிர்காலத் தேர்தல்களில் போட்டியிட ஏற்கனவே சமிஞ்ஞை கொடுத்துள்ள நிலையில், அரசாங்கம் அதன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழக்க நேரிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பகிரங்கமாக விமர்சிப்பதைத் தவிர்க்குமாறும், அவர்களை அவமரியாதை செய்வதை விட அவ்வாறு செய்ய நினைத்தால் அரசாங்கத்தில் இருந்து வெளியேற அனுமதிக்குமாறும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அதன் இளைய உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆளும் பொதுஜன பெரமுன அரசாங்கத்துடனான சுதந்திரக் கட்சியின் உறவுகள் மிகவும் மோசமடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்காலத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு பொதுக் கூட்டணியை உருவாக்கும் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதற்காக சுதந்திரக் கட்சி அரசாங்கத்திலிருந்து வெளியேறுவது இப்போது ஒரு தேவைப்பாடாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் பொதுக் கூட்டணியொன்றை அமைக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உத்தேசித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.