சுபகிருது தமிழ் வருட ராசிபலன் மிதுன ராசி – 14.4.22 முதல் 13.4.23 வரை
சமாதானத்தை விரும்பும் நீங்கள், இன, மொழி, பேதம் பார்க்காமல் பழகுபவர்கள். உங்கள் ராசிக்கு சூரியன், புதன், சுக்ரன் ஆகிய மூன்று கிரகங்களும் சாதகமான வீடுகளில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த சுபகிருது ஆண்டு பிறப்பதால் இழுபறியாக இருந்த காரியங்களெல்லாம் அடுத்தடுத்தாக முடிப்பீர்கள். மன தைரியம் பிறக்கும்.
உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும். குடும்பத்தில் அடிக்கடி சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் இருந்ததல்லவா, இனி சமாதானக் கொடி பறக்கும். கோபம் குறையும். பணப்பற்றாக்குறை அகலும். பிள்ளைகளின் உயர்கல்விக்காக அதிகம் செலவு செய்வீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். உங்கள் ராசிக்கு 3-வது வீட்டில் இந்த புத்தாண்டு பிறப்பதால் துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வர வேண்டிய பணமெல்லாம் கைக்கு வரும். வருங்காலத்திற்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். வெகுநாட்களாக வழக்குகள் இழுபறியாகிக் கொண்டிருந்ததே! இனி சாதகமாக முடியும்.
புத்தாண்டில் கிரகங்களும் பலன்களும் :
இந்தாண்டு முழுக்க சனிபகவான் 8-ல் அமர்ந்து அஷ்டமத்துச்சனியாக தொடர்வதால் ஒருவித படபடப்பு, தூக்கமின்மை, மறைமுக எதிர்ப்புகள் வந்து போகும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வழக்கில் எதிர்தரப்பால் வாய்தா வாங்கி தீர்ப்பு தள்ளிப் போகும். நீங்கள் நம்பிக் கொண்டிருந்தவர்களெல்லாம் உங்களுக்கு துரோகம் செய்ய வாய்ப்பிருக்கிறது. அந்தரங்க விஷயங்களை வெளியிடாமல் தேக்கி வைப்பது நல்லது. திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். சாப்பாட்டில் உப்பை குறையுங்கள். இரத்த அழுத்தம் அதிகமாகும். வெளி உணவுகள், வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. சொத்து வாங்கும் போது அவசரம் வேண்டாம். பணம், நகை களவு போக வாய்ப்பிருக்கிறது. எனவே குடும்பத்துடன் வெளியூர் செல்ல நேரிட்டால் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து விட்டு செல்வது நல்லது. கூடாப்பழக்க முள்ளவர்களின் நட்பை தவிர்க்கப்பாருங்கள்.
வருடம் முடியும் வரை ராகு லாப வீட்டில் அமர்வதால் செல்வாக்குக் கூடும். கௌரவப் பதவிகள் தேடி வரும். பங்குகள் மூலம் பணம் வரும். ஆனால் கேது 5-ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். மகனின் நட்பு வட்டத்தை கண்காணிப்பது நல்லது. பூர்வீக சொத்துப் பிரச்னை வெடிக்கும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்க்கப் பாருங்கள்.
குருபகவான் 10-ம் வீட்டில் தொடர்வதால் வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும். தங்க ஆபரணங்களை யாருக்கும் இரவல் கொடுக்கவோ, வாங்கவோ வேண்டாம். உங்களிடம் திறமை குறைந்து விட்டதாக நினைத்துக் கொள்வீர்கள். சிறுசிறு அவமானங்களும் வந்துச் செல்லும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களை திணிக்க வேண்டாம்.
12.11.2022 முதல் 07.12.2022 வரை உள்ள காலக்கட்டங்களில் சுக்ரன் 6-ல் மறைவதால் கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வீண் சந்தேகத்தால் பிரிவுகள் வரக்கூடும். வாகன விபத்துகள் வரக்கூடும். வீட்டிலும் கழிவு நீர் குழாய் அடைப்பு, குடிநீர் குழாய் அடைப்பு, மின்னணு, மின்சார சாதனப் பழுது வந்து நீங்கும்.
வியாபாரிகளுக்கு…
வியாபாரிகளே, தேங்கிக் கிடந்த சரக்குகளை நவீன யுக்தியால் விற்றுத்தீர்ப்பீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் உங்கள் கடை தேடி வருமளவிற்கு கடையை விரிவுபடுத்தி, அழகுபடுத்துவீர்கள். சித்திரை, மாசி, பங்குனி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புதிய முதலீடுகளைப் போட்டு போட்டியாளர்களை திக்குமுக்காட வைப்பீர்கள். வேலையாட்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். வராது என்றிருந்த பாக்கி வந்துசேரும். பங்குதாரர்களின் தொந்தரவுகள் குறையும். உணவு, வாகன உதிரிபாகங்கள், கெமிக்கல், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் ஆதாயமுண்டு.
உத்தியோகஸ்தர்களுக்கு…
உத்யோகஸ்தர்களே, மேலதிகாரி எதற்கெடுத்தாலும் கடுகடுப்பாக பேசினாரே இனி நேசக்கரம் நீட்டுவார். சித்திரை, வைகாசி, பங்குனி மாதங்களில் புது பதவிகள் வரும். உயரதிகாரி உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். சக பணியாளர்களின் சொந்த விஷயங்களில் தலையிட்டு தீர்த்து வைப்பீர்கள். சம்பளம் உயரும். புது சலுகைகளும் உண்டு. கணினி துறையினர்களுக்கு வெளிநாட்டு நிறுவனத்திலிருந்து புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
இந்தத் தமிழ்ப் புத்தாண்டு சின்ன சின்ன முடக்கங்களையும், சங்கடங்களைத் தந்தாலும், எதிர்பாராத திடீர் முன்னேற்றங்களும், உயர்ந்த அந்தஸ்தும் தேடித்தருவதாக அமையும்.