ஜனாதிபதி பதவிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாரளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும மற்றும் பிரதமர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச ஆகியோரை பரிந்துரை செய்யும் முடிவொன்று எடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன சுயாதீன அணி, ஆகியன நேற்று சந்தித்து கலந்துரையாடி இந்த முடிவுக்கு வந்துள்ளதாக மேலும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருவரையும் குறித்த பதவிகளை பெற்றுக் கொள்ள அழுத்தம் வழங்குவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. அத்தோடு நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்க்க இருவரும் தலைமையேற்று நடாத்த வேண்டுமென மேலும் நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாகவும் அறிய முடிகிறது. இருவரும் அவர்களது முடிவுகள் தொடர்பில் எந்த கருத்துக்களையும் வெளியிடவில்லை.
ஆளும் பொதுஜன பெரமுன, டலஸ் அலகப்பெருமவை ஜனாதிபதியாக நியமிக்க ஒரு குழுவும், தம்மிக்க பெரேராவை நியமிக்க இன்னுமொரு குழுவும் பரிந்துரைகளை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.
நேற்று நடைபெற்ற கூட்டம் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துக்கொரலையின் வீட்டில் நடைபெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொது செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார, பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தயாசிறி ஜயசேகர, துமிந்த தசநாயக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சுயாதீன குழு சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் அனுர ப்ரியதர்சன யாப்பா, 10 கட்சிகளது அணி சார்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, கெவிந்து குமாரதுங்க ஆகியோர் கலந்து கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது.