இங்கிலாந்தில் நடைபெற்று வரும் பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்ட போட்டியில் இலங்கைக்கான முதல் பதக்கம் கிடைத்துள்ளது. 24 வருடங்களுக்கு பின்னர் கிடைத்த முக்கிய பதக்கமாகவும் இது அமைந்துள்ளது.
யுபுன் அபேயகோன் 100 மீட்டர் தூரத்தை 10.14 செக்கன்களில் ஓடி நிறைவு செய்து வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார். பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்ட போட்டியில் பதக்கம் கிடைத்தமை இதுவே முதற் தடவையாகும்.
சுசந்திகா ஜயசிங்க வென்ற பதக்கங்களே இலங்கையினால் வெல்லப்பட்ட முக்கிய பதக்கங்கள்.
இந்த ஓட்ட போட்டியில் கென்யாவின் பெர்டினட் ஒமன்யலா 10.02 செக்கன்களில் ஓடி முதலிடத்தை பெற்றுக் கொண்டார். கடந்த முறை முதலிடத்தை பெற்றுக்கொண்ட தென்னாபிரிக்காவின் அகானி சிம்பின் 10.13 செக்கன்களில் ஓடி இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்டார்.
இந்த பதக்கம் கிடைத்தமை தனக்கு வார்த்தைகளினால் சொல்ல முடியாதளவு சந்தோசத்தை வழங்கியுள்ளதாகவும், தனக்கு பெருமையாக இருப்பதாகவும், தனக்காக உள்ளவவர்கள் அனைவருக்கும் இது பெருமையினை வழங்குவதாகவும் வெற்றி பெற்ற யுபுன் அபேயகோன் தெரிவித்துள்ளார். இது ஆரம்பமே எனவும் மேலும் பல வரவிருப்பதாகவும், தொடர்ந்தும் கடுமையாக போராடவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
