சீனாவின் ஆய்வு கப்பல் யுவான் வோங் 05 இனை இலங்கைக்கு அனுப்ப வேண்டாமென சீனாவிடம் இலங்கை கோரிக்கை முவைத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. நேற்றைய தினம் இந்த செய்தியினை இந்திய ஊடகம் ஒன்றும் வெளியிட்டிருந்தது.
இந்தியா, சீனா கப்பலின் வருகைக்கு எதிர்ப்பை வெளியிட்டமையினாலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பலின் வருகை மற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் உன்னிப்பாக தாம் அவதானித்து வருவதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சு தெரிவித்திருந்தது.
சீனா கப்பலின் வருகை மூலம் இந்தியா -சீனா நாடுகளுக்கிடையில் சிக்கல் நிலை தோன்ற இலங்கை காரணமாக அமையாது எனவும், வெளியுறவு அமைச்சர் அலி சபரி இந்த விடயங்கள் தொடர்பில் இரு நாட்டு இராஜ தந்திரிகளுக்கும் தெளிவு படுத்தியுள்ளதாக கூறியிருந்த அமைச்சர் பந்துல குணவர்தன, கப்பல் எரிபொருள் மீள் நிரப்புகைக்காகவும் வேறு பொருட்களின் மீள் நிரப்புகைக்காவும் வருவதாகவே கூறியிருந்தார்.
இந்த கப்பல் இலங்கைக்கு வருகை தரமாட்டாது என கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசியல் பிரதிநிதிகளுக்கு உறுதியளித்திருந்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் சீன அரசாங்கத்திடம் எழுத்து மூலமாக இந்த பயணத்தை பிற்போடுமாறு கோரிக்கை முன் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யுவன் வோங் 05 கப்பல், விண்வெளி ஆராய்ச்சி செய்மதி கண்காணிப்பு போன்ற விடயங்களுக்காவே வருகை தருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.