மன்னாரில் இடம் பெற்று வரும் கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் கோபுர அமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும், மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயும் கலந்துரையாடல் மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை(23.08) காலை மன்னாரில் இடம் பெற்றது.
தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் தலைமையில், நடைபெற்ற கலந்துரையாடலில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொறியியலாளர் சங்க பிரதிநிதிகள், மீனவ அமைப்பு, மத தலைவர்கள்,மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
மன்னார் மாவட்டத்தில் மக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தொடர்ச்சியாக கனிய மணல் அகழ்வு மற்றும், காற்றாலை மின் கோபுர அமைப்பு நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றமை தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன் கனிய மணல் அகழ்வு மற்றும், காற்றாலை மின் கோபுர அமைப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் மன்னாரில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் இவ்விடயம் குறித்து மௌனம் காத்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டதோடு, குறித்த விடயங்கள் தொடர்பாக எதிர்வரும் திங்கட்கிழமை(29.08) மாவட்ட ரீதியில் அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டு மக்கள் ஒன்றிணைந்து மாவட்ட ரீதியாக விழிப்புணர்வு போராட்டம் ஒன்றை முன்னெடுத்து, அரசாங்கத்திற்கு ஒரு செய்தியை கூற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.