நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையினை நீக்கும் 22 ஆம் திருத்த சட்ட விவாதம் நேற்றைய தினம்(06.10) பாரளுமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவிருந்த போதும் அது பிற்போடப்பட்டது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தன பாராளுமன்றத்தில் இதனை அறிவித்தார்.
கட்சி தலைவர்களது கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அடுத்த பாராளுமன்ற வாரத்தில் இந்த விவாதம் எடுத்துக்கொள்ளப்படுமென சபாநாயகர் மேலும் அறிவித்தார்.
இந்த திருத்த சட்டம் தொடர்பிலான இழுபறி நிலை தொடர்ந்து வரும் நிலையில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கிடையில் மாற்றுக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் சபாநாயகர் வலு கட்டாயமாக கட்சி தலைவர்கள் கூட்டத்தினை கூட்டியதாக மேலும் தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 22 ஆம் திருத்த சட்டம் தொடர்பில் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு தொடர்பில் பேசி தனக்கு கூறுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். அது தொடர்பில் பிரதமர் மற்றும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை முடிவுகளின்றி நிறைவடைந்ததாக சஜித் தெரிவித்திருந்தார்.
அதேவேளை, இந்த திருத்த சட்டத்துக்கு பாராளுமன்ற பெரும்பாண்மையினி கொண்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தாம் ஆதரவு வழங்குவதில்லை என்ற நிலைப்பாட்டினை கொண்டுள்ளதாக அந்த கட்சியின் செயலாளர் சாகல காரியவசம் கூறியிருந்தார்.
இவ்வாறான சூழ்நிலைகள் உருவாகியிருக்கும் நிலையில் 22 ஆம் திருத்த சட்டம் என்பது சாத்தியமா என்ற கேள்வி பலரது மத்தியிலும் எழுந்துள்ளது. 2/3 பெரும்பான்மையுடனேய இந்த சட்டத்தை மாற்றியமைக்க முடியும். சர்வதேச நாணய நிதியத்துக்கும் இலங்கையின் கொள்கை மாற்றத்தில் இது வழங்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த மாற்றம் அவசியமானது. ஆனால் ஆளும் பொதுஜன பெரமுனவின் ஆதரவின்றி 22 ஆம் திருத்த சட்டம் சாத்தியமில்லை எனவும் கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன.