நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறப்படும் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 03 மனுக்களும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
குறித்த மூன்று மனுக்களும் இன்று (13.07) நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது சட்டமா அதிபர் தரப்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல், இந்த முறைப்பாடு தொடர்பில் குரல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக, அரசாங்க பகுப்பாய்வு அதிகாரிகள் முன்னிலையில் மேற்கொள்ள வேண்டி இருப்பதாக நீதிமன்றில் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய, நீதித்துறை அதிகாரிகள் சங்கம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி இவ்வாறான பரிசோதனைகள் ஏதும் இன்றி, மனுவினை விசாரணை செய்வதற்கு தமக்கு ஆட்ஜேபனை இல்லை எனக் கூறினார்.
இதனையடுத்து இந்த வழக்கு செப்டம்பர் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.