சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (19.10) சீன தொலைதொடர்பாடல் நிர்மாணக் கூட்டுத்தாபனம், சினோபெக் நிறுவனம், BYD நிறுவனம் உள்ளிட்ட உயர்மட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இலங்கையின் எதிர்கால முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
துறைமுக நகரத்தை சர்வதேச நிதி மத்தியஸ்தானமாக மாற்றியமைத்தல், துறைமுக நகரத்திற்கான புதிய சட்டதிட்டங்களை உருவாக்குதல், துறைமுக நகரத்திற்காக மட்டுப்படுத்தப்பட்ட நீதிமன்ற மற்றும் வழிக்காட்டல் முறைமைகளை உருவாக்குதல் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது.
அதேபோல் இலங்கையின் போக்குவரத்துக் கட்டமைப்பை மின்சாரத்தின் ஊடாக இயக்குதல், மின் வாகன பாகங்களை ஒழுங்கமைத்தல், மின்சார ரயில் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டது.
இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்கு முடிந்த வகையில் உயரிய பங்களிப்பை வழங்குவதாகவும், இலங்கையின் முதலீட்டு வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொள்வதாகவும் முதலீட்டாளர்கள் ஜனாதிபதியிடத்தில் உறுதியளித்தனர்.
ஜனாதிபதியுடன் இலங்கை தூதுக்குழுவினரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.