பல்கலை மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் மருத்துவமனைகளை தயார்படுத்திய பொலிஸார்?

உயர்கல்விக்கு ஏற்பட்டுள்ள மரண அடி தொடர்பில் நேற்று (19.10) இடம்பெற்ற விவாதத்தில் தான் பல கருத்துக்களை முன்வைத்ததாகவும்,மாணவர்களால் 3 வேளையும் சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பொதுவாக பல்கலைக்கழக மாணவர்கள் அரசியல்வாதிகளை சந்திப்பதில்லை என்றாலும், தன்னைச் சந்தித்து தமது குறைபாடுகளை முன்வைத்தாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு ஆயிரமாயிரம் பிரச்சினைகளுக்கு மத்தியில் அவர்கள் தமது உரிமைகளுக்காக போராட்டம் நடத்தும் போது, பாதுகாப்புப் படையினரும், பொலிஸாரும் கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர் என்றும், இதற்கு மிக அண்மைய உதாரணம் பேராதனைப் பல்கலைக்கழக ஆர்ப்பாட்டம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு மிலேச்சத்தனமான தாக்குதல் விடுக்கப்படுவதாகவும், இங்கு காயங்களுக்கு உள்ளானால் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளை தயார்படுத்துமாறு
நுகேகொட பிரதேசத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் என்றும், ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆர்ப்பாட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இன்று (20.10) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமது உரிமைக்காக குரல் எழுப்பும் பேச்சு சுதந்திரம் உள்ள நாட்டில் இவ்வாறான அடக்குமுறை நடவடிக்கைகளை அங்கீகரிக்க முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

Social Share

Leave a Reply