வவுனியாவில் பாடசாலை மாணவி மீது ஆண் ஆசிரியர் தாக்குதல்

வவுனியா. வடக்கு வலயத்துக்கு உட்பட்ட பாடசலை ஒன்றில் உயர்தர மாணவி ஒருவரை அந்த பாடசாலையில் கற்பிக்கும் ஆண் ஆசிரியர் ஒரு தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக பனை மட்டையினால் ஆசிரியர் குறித்த மாணவியை தாக்கியதாக மேலும் தகவல் வெளியாகியுள்ளது.

பெற்றோர் இல்லாத நிலையில் பாட்டி மற்றும் அத்தையின் குடும்பத்துடன் வசித்து வரும் மாணவி ஆசிரியரினால் தாக்கப்பட்டதனை, குறித்த மாணவியின் அத்தை உறுதி செய்துள்ள ஒலிப்பதிவு வி மீடியாவுக்கு கிடைத்துள்ளது. அதில் அவர் கீழுள்ளவாறு கூறியுள்ளார்.

“நண்பிகளுக்கிடையில் கதைத்த விடயத்தை கேட்டுக்கொண்டிருந்த வேறு மாணவிகள் சிலர் ஆசிரியருக்கு தெரிவித்துள்ளனர். ஆசிரியர் குறித்த மாணவியை புவியில் அறைக்கு அழைத்துள்ளார். அங்கு மாணவி செல்லும் போது குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஆசிரியர் பிறிதொரு ஆசிரியருடன் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்தார். அந்தவேளையில் அங்கு அமருமாறு கூற மாணவி நின்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது திடீரென “என்னைப்பற்றி என்ன சொல்லி திரிகிறாய்” என ஆசிரியர் கேள்வி கேட்டுள்ளார். அப்போது “நான் எதுவும் கதைக்கவில்லை. நீங்கள் சொன்னால்தானே தெரிவியுமென” மாணவி கூற, என்ன வாய் காட்டுகிறாய் என ஆசிரியர் பனை மட்டையால் அடித்துள்ளார். பனை மட்டை முறிந்ததும் மூங்கில் தடி வெட்டி வருமாறு மாணவர்களிடம் கூறியுள்ளார். அந்த மூங்கில் தடி கொண்டுவருவதனை கண்ட மாணவி கதவை திறந்துகொண்டு ஓடிச் சென்று ஆசிரியை ஒருவரை கட்டிப்பிடித்துள்ளார். அவரிடம் இருந்து மாணவியை இழுத்து செல்லும் போது மாணவி அவரிடமிருந்து தப்பி சென்றுள்ளார். பின்னர் வீட்டுக்கு வந்து கதவை பூட்டிவிட்டு தான் இறக்கப்போவதாக கத்தி அழுதுள்ளார். இந்த விடயத்தை அறிந்த ஏனைய மாணவர்களின் பெற்றோரும் வீட்டுக்கு வந்துள்ளனர். அவரை சமாதானம் செய்து நடந்த விடயங்களை கேட்டு அடிபட்ட இடங்களை பார்வையிட்ட வேளையில் முதுகில் பல கண்டல் காயங்கள் காணப்பட்டன.

இந்த நிலையில் ஏனையவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் சிறுவர் நன்னடத்தை பிரிவுக்கு அறிவிக்க அவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்த வேளையில் அடித்த காயங்களை பரிசோதனை செய்து உறுதி செய்த பின்னர் குறித்த ஆசிரியர் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு அவரை விசாரித்த வேளையில் தான் கையில் மட்டுமே அடித்த்தாக கூறினார். ஆனால் பொலிஸார் பரிசோதனை செய்த விடயத்தை கூறிவிட்டு 14 நாட்கள் ஆசிரியரை விளக்க மறியலில் வைக்க முடியும். அதன் பின்னர் நீதிமதின்றதில் முன்னிலைப்படுத்த முடியும். என்ன செய்வது என என்னிடம் தன்னிடம் கேட்டார்கள். பிள்ளையின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு, ஆசிரியரை எச்சரித்து விடுதலை செய்யுமாறு தான் பொலிஸாருக்கு கூறியதனை தொடர்ந்து அவர் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் விடுதலை செய்யப்பட்ட பின்னர் குறித்த மாணவி தொடர்பில் ஆசிரியர் அவதூறான கருத்துக்களை சொல்லி வருவதாக அறிந்துள்ளோம். அவ்வாறு செய்தால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் குறித்த பாடசாலை அமைந்துள்ள ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் தொடர்பு கொண்ட கேட்ட போது “இவ்வாறன சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும், இரு தரப்பினரும் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட நிலையில், ஆசிரியருக்கு எதிராக பாதிக்கப்பட்ட மாணவி முறைப்பாடு செய்யவில்லை எனவும், இரு தரப்பினரும் சமாதானமாக இந்த பிரச்சினையை முடிப்பதாக ஒத்துக்கொண்டதாகவும் அதனை தொடர்ந்து பொலிஸ் நிலையத்திலிருந்து சென்றதாகவும்” வி மீடியாவுக்கு கூறினார்.

பாடசலை அதிபருடன் நேற்று(01.12) காலை 10.30 மணியளவில் தொடர்பு கொண்டு கேட்ட போது, தான் கூட்டம் ஒன்றில் இருப்பதாகவும் 12.00 மணிக்கு பின்னர் தொடர்பு கொள்ளுமாறும் கூறினார். மீண்டும் தொடர்பு கொண்ட போது அவர் எமது தொலைபேசி அழைப்புக்கு பதில் வழங்கவில்லை.

இந்த விடயம் தொடர்பில் விசாரணை செய்ய மூவர் அடங்கிய குழு ஒன்று கடந்த 30 ஆம் திகதி பாடசலைக்கு அனுப்பப்பட்டதாகவும், நேற்று மாலை விசாரணை அறிக்கை தனக்கு கிடைக்குமெனவும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் வவுனியா வடக்கு வலய கல்விப்பணிப்பாளர் லெனின் அறிவழகன் வி மீடியாவுக்கு நேற்று(01.12) தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளில் மாணவர்கள் தாக்கப்படுவது சட்ட ரீதியில் தடை செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் பிழை செய்தலும் இந்தளவு கொடூரமாக தாக்குதல் செய்ய முடியாது. பெண் பிள்ளையின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு அவரது குடும்பத்தினர் பொலிஸ் நடவடிக்கையினை எடுக்காமல் தவிர்த்துள்ளனர். ஆனால் கல்வி சமூகம் இந்த நடவடிக்கைக்கு உரிய நடவடிக்கையினை எடுக்க வேண்டும்.

ஆசிரியர் மற்றும் மாணவி, பாடசாலை ஆகியவற்றைன் பெயர்களை எமது ஊடகம் வெளியிடவில்லை. குற்றம் நிரூபிக்கபப்ட்டால், அல்லது நடவடிக்கைள் எடுக்கப்பட்டால் குறித்த விடயங்களை எமது ஊடகம் வெளியிடும்.

Social Share

Leave a Reply