பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதன் மூலம் நாட்டை அபிவிருத்தியை நோக்கி அழைத்துச் செல்லும் வேலைத்திட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்களால் முக்கிய பங்கு வகிக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுடன் அண்மையில் யாழ்.ஜெட்விங் ஹோட்டலில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் சுட்டிக்காட்டியுள்ளார்.
விவசாயம், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அபிவிருத்திக்காக பல்கலைக்கழக மாணவர்களின் பங்களிப்பை எதிர்பார்ப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, இந்த முயற்சிகளில் இணைந்துகொள்ளுமாறு பல்கலைக்கழக மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டின் அபிவிருத்திக்காக பல்கலைக்கழக சமூகத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னணி பங்களிப்பு குறித்து தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்கும் வகையில் வடமாகாணத்தில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் குறித்து மாணவர்களுக்கு ஜனாதிபதி தெளிவுப்படுத்தியுள்ளார்.
மனித வளமே ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு உந்து சக்தியாக அமைகின்றது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நவீன தொழில்நுட்பத்தை மையப்படுத்தி அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்குதல் உள்ளிட்ட உயர்கல்வித் துறையை விரிவுபடுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து இதன்போது மாணவர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
இதன்போது மாணவர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளும் ஜனாதிபதியால் அளிக்கப்பட்ட பதில்களும் கீழே..
கேள்வி:
ஒரு நாட்டின் வருமானத்திற்கு வரி வருமானம் முக்கிய காரணியாகும். நாங்கள் எங்கள் பல்கலைக்கழக ஆய்வுகளில் தொழில்முனைவோர் ஆலோசனைகள் மற்றும் தொழில்முனைவு பற்றி கற்கிறோம். ஆனால் ஜனாதிபதி அவர்களே, அது நடைமுறையில் செயல்படுத்தப்படுவதில்லை. எனவே, தொழில் முனைவோர் நடவடிக்கைகளுக்கான மாணவர்களின் ஆலோசனைகளை உள்ளடக்குவதற்கான நடவடிக்கைகளை மேம்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பதில்:
அத்தகைய வட்டத்தை உங்கள் பீடத்தில் நிறுவி, எமது பொருளாதார விவகாரம் தொடர்பான குழுவுடன் நேரடியாக இணைய முடியும்.
கேள்வி:
ஜனாதிபதி அவர்களே, இத்திட்டம் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு ஊக்கமளித்தால், அது மிகவும் பொருத்தமானது என்பதைக் கூற வேண்டும்.
பதில்:
பல்கலைக்கழக மாணவர்களுக்கு குழுக்கள் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு திறைசேரிக்குச் சென்று அது எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து கற்கலாம்.