கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலத்தில், அவுஸ்ரேலிய அணித்தலைவர் பேட் கம்மின்ஸ் 20.05 கோடி இந்திய ரூபாவுக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும், மற்றுமொரு அவுஸ்ரேலிய வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 24.75 கோடி இந்தியா ரூபாவுக்கு விலை போயிருந்தனர்.
இந்த இரண்டு வீரர்களும் இன்று(23) நடைபெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 3வது போட்டியில் ஒருவரையொருவர் எதிர்கொள்ளவுள்னர்.
பேட் கம்மின்ஸ், அணித் தலைவராக 2023ம் ஆண்டிற்கான உலக கிண்ண தொடரில் அவுஸ்ரேலிய அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றிருந்தனர். தற்போது, ஹைதராபாத் அணிக்கும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், நியூசிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான டேனியல் வெட்டோரி அணியின் பயிற்சிவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரின் புதிய கூட்டணியுடன் ஹைதராபாத் இன்றைய போட்டியில் களமிறங்கவுள்ளது.
இறுதியாக 2015ம் ஆண்டில் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்றிருந்த மிட்செல் ஸ்டார்க, 8 வருடங்களின் பின்னர் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் கொல்கத்தா அணிக்காக இன்று(23) விளையாடவுள்ளார்.
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான துஷ்மந்த சமீர கொல்கத்தா அணியிலும், வனிந்து ஹசரங்க ஹைதராபாத் அணியிலும் இடம்பெற்றுள்ளனர். இருப்பினும் சமீர உபாதையின் காரணமாக இன்றைய போட்டியில் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹசரங்க, தற்போது நடைபெற்று வரும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இணைக்கப்பட்டிருந்தாலும், போட்டித் தடையின் காரணமாக அவர் போட்டிகளில் பங்கேற்கவில்லை. இந்நிலையில், இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் அவருடைய பங்கேற்பு தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டியின் ஆடுகளம், பெருமளவில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. போட்டியின் இரண்டாம் இன்னிங்ஸின் போது பனித்துளிகளின்(Dew) தாக்கம் காணப்படும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஆகவே இரண்டாவதாக துடுப்பெடுத்தாடும் அணிக்கு இது வாய்ப்பாக அமையும்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.