மஹிந்தவின் அறிக்கைக்கு பதில் வழங்கிய எதிர்த்தரப்பினர் 

தேசிய வளங்கள் மற்றும் அரச நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வது தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ வெளியிட்டுள்ள அறிக்கைக்கு எதிர் தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதிலளித்துள்ளனர். 

அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் செயற்பாடுகளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை ஒத்திவைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நேற்று(13.05) யோசனையொன்றை முன்வைத்திருந்தார். 

தற்போதைய அரசாங்கத்தின் இடைக்காலத் தன்மையை சுட்டிக்காட்டியிருந்த முன்னாள் ஜனாதிபதி, அரச சொத்துக்கள் தொடர்பான தீர்மானங்களை வாக்காளர்களிடம் இருந்து கிடைக்கும் ஆணைக்கு ஏற்ப எதிர்காலத்தில் உருவாக இருக்கு நிர்வாகத்திற்கு வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைத்திருந்தார். 

“அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கம் அமைக்கப்படும் வரை அரச சொத்துக்கள் அல்லது நிறுவனங்களை விற்பனை செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் ஒத்தி வைக்கப்பட வேண்டும் என்று முன்மொழிகின்றேன். புதிய அரசாங்கம், அரசாங்கத்திற்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் நிறுவனங்களை தேர்தலில் அவர்கள் பெற்றுக் கொள்ளும் ஆணைக்கு ஏற்ப கையாள முடியும்” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதியின் கூற்றுக்கு பதிலளித்த முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் சரித ஹேரத், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தற்போதைய நிர்வாகத்தின் தவறான நடவடிக்கைகளுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்து வருவதாக, பாராளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள X தளப் பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்‌ஷவின் அறிக்கைக்கு பதிலளித்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, அரச நிறுவனங்களின் சீர்திருத்தத்தை எதிர்ப்பதன் மூலம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கேவின் நிலைப்பாட்டை மஹிந்த ராஜபக்‌ஷ குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள X தளப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Social Share

Leave a Reply