இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் Playoffs சுற்றின் முதலாவது Qualifier போட்டி இன்று(21.05) செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. தரவரிசையில் முறையே முதல் இரண்டு இடங்களில் உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் முதலாவது Qualifier போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
தொடரின் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பங்குபற்றிய 14 போட்டிகளில் 9 வெற்றிகளுடன் முதல் அணியாக Playoffs சுற்றுக்கு தகுதி பெற்றுக்கொண்டது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பங்குபற்றிய 14 போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றியீட்டி தரவரிசையில் இரண்டாம் இடத்தை தக்க வைத்துக் கொண்டது.
இந்தியாவில் நிலவி வரும் சீரற்ற வானிலையால், ஐ.பி.எல் தொடரின் சில போட்டிகள் தடைப்பட்டிருந்த போதும், அந்நாட்டு வானிலை அறிக்கைகளின்படி அகமதாபாதில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது Qualifier போட்டியின் போது மழைக் குறுக்கிடாது என தெரிவிக்கப்படுகின்றது.
கொல்கத்தா அணிக்கு சுனில் நரைனுடன் இணைந்து அதிரடியான ஆரம்பத்தை வழங்கியிருந்த இங்கிலாந்து வீரர் பில் சால்ட், T20 உலக கிண்ணத் தொடரில் பங்கேற்பதற்காக தன்னுடைய சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளமையினால் இன்றைய போட்டியில் பங்கேற்காமை கொல்கத்தா அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. அவருக்கு பதிலாக ஆப்கானிஸ்தான் வீரர் ரஹமதுல்லா குர்பாஸ் விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, ஹைதராபாத் அணியின் முக்கிய வீரர்கள் அனைவரும் இன்றைய போட்டியில் பங்கேற்கவுள்ளமை அணிக்கு பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது. ஹைதராபாத் அணி பங்கேற்ற இறுதி இரண்டு போட்டிகளிலும் அணியில் இடம் பெற்றிருந்த இலங்கையின் இளம் சுழற்பந்து வீச்சாளரான விஜயகாந்த் வியாஸ்காந்த் இன்றைய போட்டியிலும் விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் இம்முறை ஐ.பி.எல் தொடரின் ஆரம்பத்திலிருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த நிலையில், முதலாவது Qualifier போட்டியிலும் இரு அணிகளின் அதிரடி தொடர்வதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெறுவதுடன், தோல்வியுறும் அணி நாளை நடைபெறவுள்ள Eliminator போட்டியில் வெற்றிபெறும் அணியை 2வது Qualifier போட்டியில் எதிர்க்கொள்ளும்.