பொருளாதார வளர்ச்சியின் நன்மைகள் அனைவருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் – சஜித் 

பொருளாதாரத்தை விரிவுபடுத்தி, பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்து, பொருளாதார வளர்ச்சியின் பலன்களை இந்நாட்டு ஒட்டுமொத்த மக்களும் அனுபவிக்கும் வகையில் அனைவருக்கும் சௌபாக்கியத்தை ஏற்படுத்த வேண்டும். இதுவே எம்மால் மீண்டு வர ஒரே வழியாகும். பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் செல்வந்தர்களுக்கு மாத்திரமல்லாது, அனைத்து பிரிவினருக்கும் சமமாக பகிர்ந்தளிப்பதற்கான நியாயமான ஏற்பாடொன்று தேவை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்ததாக அவரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 362 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன கம்பஹா, வத்தளை, மாபோல, அல்-அஷ்ரப் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த 22ம் திகதி இடம்பெற்றது. இதன்போது, பாடசாலை அபிவிருத்தி நிதியத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.

எங்கு பார்த்தாலும் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். மக்களின் வாழ்வாதாரம், கல்வி, சுகாதாரத்துறை, மீன்பிடித் தொழில் என்பன வீழ்ச்சியடைந்துள்ளதால், இவற்றுக்கான தீர்வுகளையும், பதில்களையும், வேலைத்திட்டங்களையுமே அனைவரும் தேடிக்கொண்டிருக்கின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாம் எப்போதும் நீதி நியாயம் மற்றும் மனிதநேயம் குறித்து சிந்திக்க வேண்டும். பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் விடயத்தில் பிரித்து ஒரு தொகுதி மாணவர்களுக்கு மட்டுமே வழங்கி வருகின்றனர். மனிதாபிமானமற்ற முறையில் இந்த மதிய உணவு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. 

தகனமா அடக்கமா என்ற விடயத்தில் ஆட்சியாளர்கள் நியாயமற்ற முறையில் நடந்து கொண்டனர். தவறான முடிவுகளை எடுத்தனர். உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுரைகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு மதத்தை, ஒரு இனத்தை, அச்சமூகத்தின் கலாச்சாரத்தை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர். தவறான ஆலோசனைகளை வழங்கி தேசிய ஒற்றுமையை சீர்குலைத்தவர்கள் ஐக்கிய மக்கள் அரசாங்கத்தில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். தீவிரவாதத்தை யார் முன்னெடுத்தாலும் அவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. மாணவச் செல்வங்கள் சகல மதங்கள், கலாச்சாரம் மற்றும் இனங்களை மதித்து நடந்து கொள்ள வேண்டும். ஒற்றுமையே நாட்டின் பலமாகும். இதன் ஊடாக நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு விடுத்தார்.

இனவாதத்தைத் தூண்டாமல் பாடசாலைக் கல்வி முறையைப் பாதுகாக்க, ஸ்மார்ட்  கல்வியை வலுப்படுத்த ஒன்றிணையுமாறு எதிர்க்கட்சித் தலைவர் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். 

Social Share

Leave a Reply