சஜித் – சம்பிக்க ஊடலை நிறைவு செய்யவேண்டும்- மனோ

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற சம்பிக்க ரணவக்க ஆகியோருக்கிடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையை கைவிட்டு, இணைந்து செயற்பட வேண்டுமென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச,சம்பிக்க ரணவக்க ஆகியோருக்கிடையில் முறுகல் நிலை இருக்கின்றது என்ற பேச்சுக்கள் பலர் மத்தியிலும் இருந்து வந்தது. நேற்று நடைபெற்ற சம்பிக்க ரணவக்கவின் 43 ஆம் படையணி மாநாட்டில் சஜித் பிரேமதாச கலந்து கொள்ளாத நிலையில் அந்த மாநாட்டுக்கு செல்லவேண்டாமென பலரை சஜித் பிரேமதாச தடுத்தாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் மனோ MP இன் குறித்த கோரிக்கை அதனை உறுதி செய்துள்ளது. பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஊழல் எதிர்ப்பு குழு அங்கத்தவர்களை விசாரிக்கும் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் இன்று சாட்சியம் அளித்து விட்டு, ஊடகங்களிடம் உரையாற்றிய போதே மனோ கணேசன் எம்பி இந்த கோரிக்கையை முன் வைத்தார்.

“நாம் முன்னோக்கி சென்று, இந்த காட்டாட்சியை வீழ்த்த வேண்டும் என்றால் சஜித் பிரேமதாசவும், சம்பிக்க ரணவக்கவும் முரண்பாடுகளை மறந்து கரங்கோர்க்க வேண்டும்.

வழமையாக அரசாங்கங்கள் பதவிக்கு வரும். பின்னர் அது விழும். அதையடுத்து புதிய அரசாங்கம் பதவிக்கு வரும். அதுவும் விழும். இன்னொரு அரசாங்கம் வரும். இதுவே வழமை.

ஆனால், இன்று அரசாங்கம் விழுவதற்கு முன் நாடு விழுந்து விட்டது. அண்டை நாடுகளிடம் கெஞ்சி கூத்தாடி கைமாற்று வாங்கி, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, பெருங்கடன்களின் மீள் செலுத்தும் தொகையை செலுத்தி காலத்தை ஓட்டும் நிலைமைக்கு நாடு விழுந்து விட்டது.

ஆகவே புதிதாக கட்டி எழுப்ப வேண்டியது புதிய அரசாங்கம் என்பதை விட, புதிய நாடு என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆகவே இன்று இந்நாட்டின் அரச எதிர்ப்பு சக்திகள் அனைத்தும் கரங்கோர்க்க வேண்டும். அதற்கு முன் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசவும், 43ம் படையணி தலைவர் பாடலி சம்பிக்க ரணவக்கவும் கரங்கோர்க்க வேண்டும்” என ஊடகங்கள் மூலமாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தனது கருத்துக்களை வெளியிட்டார்.

சஜித் - சம்பிக்க ஊடலை நிறைவு செய்யவேண்டும்- மனோ
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version