தற்போதைய சிக்கல்கள் தனது தவறல்ல – ஜனாதிபதி

நாட்டை ஆட்சி செய்யும் போது, பொதுமக்களின் சுதந்திரம் மற்றும் எதிர்பார்ப்புகளை உறுதி செய்யும் ஜனநாயக முறைமையிலிருந்து விலகப்போவதில்லையென , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆனால், அதனால் கிடைக்கும் சுதந்திரத்தைத் தவாறாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டாமென்று, அனைத்துத் தரப்பினரிடமும் ஜனாதிபதி கோரிக்கையினை முன்வைத்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்,அமைச்சர் சமல் ராஜபக்ஷ ஷ ஆகியோர் ஒரு இலட்சம் மகாவலி ரண்பிம காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வில், இன்று (26.02) எம்பிலிபிட்டிய மகாவலி மைதானத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்தார்.

அரசாங்கத்தின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்துக்கமைய, சிக்கல்களற்ற காணிகளின் உரித்துரிமையை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், ரண்பிம காணி உறுதிப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில், சிக்கலற்ற ஒரு இலட்சம் காணிகளின் உரித்துரிமையை வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக, 35,000 காணி உறுதிப் பத்திரங்கள், 10 வலயங்களைச் சேர்ந்த விவசாய மக்களுக்கு வழங்கப்படுகின்றன. அடுத்த ஆண்டு இறுதிக்குள், மகாவலி பிரதேசங்களில் வசிக்கும் விவசாய மக்கள் அனைவருக்குமான காணி உறுதிப் பத்திரங்களை வழங்கி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ரண்பிம காணி உறுதி வழங்கும் நிகழ்வைக் குறிக்கும் வகையில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரால், 30 பேருக்கான காணி உறுதிகள் வழங்கப்பட்டன.

அந்நியச் செலாவணி பற்றாக்குறையானது, இன்று நாம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகும். கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக, சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளால் கிடைக்கப்பெறும் செலாவணி இழப்பு, இதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.

முந்தைய அரசாங்கங்கள் பெற்றிருந்த கடன்களை வட்டியுடன் செலுத்தவேண்டி ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினைகள், தனது அல்லது தனது அரசாங்கத்தின் தவறுகளால் ஏற்பட்டவை அல்லவென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தற்போது நிலவும் சவால்களுக்கு முகங்கொடுக்க, எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும், அரசாங்கமும் இணைந்துப் பணியாற்ற வேண்டிய தேவையை எடுத்துரைத்த ஜனாதிபதி, இடையூறு விளைவிக்கும் வேலைநிறுத்தப் போராட்டங்கள், பொய்ப் பிரசாரங்கள் போன்றவற்றை, எந்தவொரு பொறுப்பான தரப்பிடமிருந்தும் எதிர்பார்க்கவில்லை என்றார்.

தற்போதைய சிக்கல்கள் தனது தவறல்ல - ஜனாதிபதி
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version