பரசிட்டமோல் 500 mg வகை மாத்திரைகளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டு அதி விசேட வர்த்தமானி இன்று வெளியிடப்பட்டுள்ளது.
பரசிட்டமோல் என குறியிடப்பட்டுள்ள சகல நாமங்களையும் (Brand) கொண்ட மாத்திரைகளின் அதிகபட்ச விலை 2.30 ரூபா என வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதர அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல கடந்த 28 ஆம் திகதி அமைச்சரவை கூட்டத்தில் பரிந்துரை செய்தமைக்கமைய இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், ஏற்றுமதியாளர்கள், மருத்துவ விநியோகஸ்தர்கள், மருந்தகங்கள், வைத்தியர்கள், மருத்துவ சேவையாளர்கள்,பற்சிகிச்சை வைத்தியர்கள், மிருக வைத்திய நிபுணர்கள், மருத்துவ நிறுவனங்கள், தனியார் மருத்துவ நிறுவனங்கள், தனி நனிபர்கள் என யாரும் இந்த அதிகபட்ச விலைக்கு மேல் குறித்த மாத்திரைகளை விற்பனை செய்ய கூடாதென வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரசிட்டமோல் வகை மாத்திரைகளை விற்பனை செய்யும் ஒவ்வொரு நபரும், நிறுவனமும் எந்த நாம மாத்திரையினை என்ன விலைக்கு விற்பனை செய்தார்கள் என்பது தெளிவாக பற்றுசீட்டில் குறிப்பிடப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் தெளிவான முறையில் அதிகப்பட்டச விலையினை குறியிட்டிருக்க வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.