ஜனாதிபதி செயலகம், ஐக்கிய மக்கள் சக்தியினால் முற்றுகை

ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று பிற்பகல் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி ஜனாதிபதி செயலகத்தை சென்றடைந்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணி கட்சியின் உறுப்பினர்கள் , பல்லாயிரணக்கான மக்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்.

கொழும்பு மாளிகாவத்தை சிறிசேன மைதானம், எதிர்க்கட்சி தலைவரின் காரியாலயம் ஆகிய பகுதிகளில் பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பித்த பேரணி, ஜனாதிபதி செயலகத்தை பிற்பகல் 4.15 அளவில் சென்றடைந்துள்ளது. ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி தங்கள் எதிர்ப்பினை ஆர்ப்பாட்டகாரர்கள் காண்பித்து வருகின்றனர்.

ஜனாதிபத்திக்கு ஒரு மாத காலஅவகாசம் தருவதாகவும், அதற்குள் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காணுமாறும், இல்லாவிட்டால் தாங்கள் மக்களோடு இணைந்து வீட்டுக்கு அனுப்பவோம் என்பதனை வெளிக்காட்டவே இந்த பேரணி எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னான்டோ அந்த இடத்தில தெரிவித்தார்.

“கோட்ட கோ ஹோம்” (Gotta go home) என்று வாசகங்கள் காட்சி படுத்தப்பட்ட அதேவேளை கோஷங்களையும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் எழுப்பி வருகின்றனர். ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னாள் பதாதைகளை தீயிட்டு கொளுத்தியும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பேரணியில் கலந்து கொண்ட சிலர் ஜனாதிபதி செயலகத்துக்குள் உட்செல்ல முயன்ற போதும் விசேட அதிரடிப் படையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். கலகம் அடக்கும் பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் கடுமையான பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னாள் காலி வீதியிலும், காலி முகத்திடலில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி, விலை அதிகரிப்பு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பினை தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி இந்த பேரணியினை நடாத்திவருகிறது.

ஜனாதிபதி செயலகம், ஐக்கிய மக்கள் சக்தியினால் முற்றுகை
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version