நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மீது சகல குற்றங்களையும் சுமத்தி விட்டு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் நல்லவர்கள் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, பாராளுமன்ற உறுப்பினர்கள் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் பேச ஆரம்பித்து அவர்களோடு மீண்டும் அரசியல் கூட்டு அமைக்க திட்டம் போடுவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் சமூக வலைதளத்தில் இன்று தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.
இந்த மூவருக்கும், ராஜபக்ஷக்களுக்கும் துணை போகும் தமிழ் – முஸ்லிம் எடுபிடிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். இனி அவர்களுக்கு மன்னிப்பிலை எனதெரிவித்துதுள்ள மனோ கணேசன் தற்போதைய எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் எல்லோரும் “அக்மார்க் புத்தர்கள்” இல்லை. ஆனால், ஒப்பீட்டளவில், ராஜபக்சர்கள் அளவுக்கு மோசமில்லை. பேசி, போராடி, உரையாடி, ஒரே நாட்டுக்குள் சமத்துவமாக வாழும் சூழலை உருவாக்கலாம் எனவும் அவர் மேலும் பதிவிட்டுள்ளார்.
மனோ MP பதிவிட்டுள்ள முழுமையான பதிவு கீழுள்ளது.
“பசில்தான் குற்றவாளி”, “மஹிந்த, கோட்டா ப்ளஸ் மற்ற ராஜபக்சர்கள் சுற்றவாளிகள்” என விமல், உதய,வாசு என்ற மூன்று ஆணிகள் இப்போது பேசுகின்றன.
அதாவது, அனைத்து பிரச்சினைகளுக்கும் பெசில்தான் குற்றவாளி என தீர்ப்பு வழங்கி விட்டு, ஏனைய ராஜபக்சக்களை அழைத்து கொண்டு இன்னொரு “ரவுண்ட்” போக திட்டம்.
இதில் இருவர். கடந்த காலங்களில் இந்த ஆளும் அரசில் 2019-2022 வரை இருந்த போதும் சரி, எதிர்கட்சியில் 2015-2019 வரை இருந்தபோதும் சரி, பச்சையாக தமிழ்-முஸ்லிம் எதிர்ப்பு இனவாதம் பேசுபவர்கள்.
மூன்றாமவர், தனது பழைய இடதுசாரி வரலாற்றை வைத்துக்கொண்டு அப்படியும் ,இப்படியும் அசைபவர். ஆனால், மூன்றும் ஒரே துருபிடித்த ஆணிகள்தான்.
இந்த ஆணிகளுக்கு துணை போகும் தமிழ்-முஸ்லிம் எடுபிடிகளும் ஆங்காங்கே இருக்கிறார்கள். இன்னமும் ராஜபக்சர்களுக்கு துணை போகும் தமிழ்-முஸ்லிம் எடுபிடிகளும் இருக்கிறார்கள். இவர்களுக்கு இனி மன்னிப்பில்லை.
நம்மை பொறுத்தவரை, பசில், மஹிந்த, கோடா இன்னும், மிச்சம் மிகுதி உள்ள ஒரு ராஜபக்சரும் வேண்டாம். இவர்களை வைத்துக்கொண்டு இந்நாட்டில் தமிழ்-முஸ்லிம் மக்கள் நிம்மதியாக வாழவே முடியாது.
அதற்காக இன்று எம்முடன் எதிரணியில் இருப்பவர்கள், எல்லோரும் “அக்மார்க் புத்தர்கள்” இல்லை. ஆனால், ஒப்பீட்டளவில், ராஜபக்சர்கள் அளவுக்கு மோசமில்லை. பேசி, போராடி, உரையாடி, ஒரே நாட்டுக்குள் சமத்துவமாக வாழும் சூழலை உருவாக்கலாம்.
“ஒருவருமே வேண்டாம்” என்று கூறி விட்டு, காலம் பூராவும் சுடு காட்டில் வீடு கட்டி வாழ முடியாது. அப்படி வாழ நினைப்பவர்கள் போய் வாழட்டும். நாம் வாழ முடியாது.
என்னை, எம்மை நம்பும் மக்களுக்கு அப்படி நான் வழி சொல்ல-காட்ட மாட்டேன்
