விளையாட்டு துறை, இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மாலைதீவுகள் சென்று நீர் விளையாட்டில் ஈடுபட்டது சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. நாடு மோசமான நிலையில் உள்ள போது அமைச்சர் வெளிநாடு சென்று விளையாட்டில் ஈடுபாடுகிறார் என்ற விமர்சனங்களே முன்வைக்கப்பட்டு வருகின்றன.
மாலைதீவுகள் விளையாட்டு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த நாட்டின் முதலாவது விளையாட்டு நாள் நிகழ்வுக்காக சென்ற நாமல் ரகபக்ஷ, நீர் விளையாட்டு இடம்பெறும் இடத்துக்கு சென்று அந்த விளையாட்டில் பங்கெடுத்திருந்தார். வீடியோ மூலமாக இது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையிலேயே இந்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்வில் மாலைதீவுகள் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் தலைமையில் நடைபெற்றது.
இந்த சம்பவம் தொடர்பில் விளக்கமளித்த அமைச்சர் நாமல், மாலைதீவுகள் இலங்கை சுற்றுலா துறையில் முக்கிய அங்கம் வகிக்கும் நாடு. இரண்டு நாடுகளுக்குமிடையிலான விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம் தொடர்பாக பல தொடர்புகள் உள்ளன. இலங்கையின் நட்பு நாடு என்ற ரீதியில் இந்த விஜயம் முக்கியத்துவமானதாக அமைகிறது.
இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளும் மாலைதீவுகளில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறான நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வது முக்கியமானதாக அமைகிறது. இதனால் இலங்கைக்கு எந்த செலவும் ஏற்படவில்லையென அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாம் ஒளித்திருந்து கொண்டு புகார் செய்ய கூடாது. தீர்வுகள் தொடர்பில் செயற்பட வேண்டும். மக்களின் விரக்தி தொடர்பில் நாம் நன்கறிவோம். இதிலிருந்து வெளிவர நாம் கடுமையாக போராட வேண்டுமென மேலும் தெரிவித்த நாமல் ராஜபக்ஷ
“நேர்தன்மையான செயற்பாடுகளே முன்னேற்றத்தை தரும்” என கூறியுள்ளார்.
