இலங்கையிலிருந்து 80 களில் புலம் பெயர்ந்து சென்று சுவிற்சலாந்தில் நிரந்தரமாக வசித்து வரும் கந்தையா சிங்கம் விளையாட்டு துறையினூடாக பல செயற் திட்டங்களை செய்து வருகிறார். அந்த நாட்டில் வெள்ளைக்காரர்களோடு சதுரங்கம் விளையாடி பல வெற்றிகளை பெற்று சாதனை படைத்த இவர் தனது வெற்றிகளோடு நிறுத்தி விடாது உலகம் பூராவும் தமிழர்கள் மத்தியில் சதுரங்கத்தை கொண்டு சேர்க்கிறார்.
இன்னொரு புறம் இறகுப்பந்து இவருக்கு பிடித்தமான விளையாட்டு. அதிலும் பல விடயங்களை செயற்படுத்தி வருகிறார். உலக தமிழர் சதுரங்கப் பேரவை, உலக தமிழர் இறகுப்பந்து பேரவை ஆகியவற்றை நிறுவி ஏரளமான போட்டிகளை நடாத்தி வருகிறார்.
இலங்கையிலும் இரண்டு விளையாட்டுகளிலும் நீண்ட நாட்களாக பல வேலைத்திட்டங்களை செய்துள்ளார்.
இவருடைய இன்னுமொரு பிடித்தமான விடயமான புகைப்படத்துறையிலும் நல்ல விடயங்களை செய்து வருகிறார். இயற்கை படப்பிடிப்பு இவருக்கு பிடித்தமானது. உலக தமிழர் புகைப்பட பிடிப்பாளர் பேரவை என ஒரு அமைப்பையும் நிறுவியுள்ளார்.
சகல அமைப்புகளையும் ஆரம்பித்தவர் நிர்வாக பொறுப்புகளை ஏனையோருக்கு வழங்கிவிட்டு பின்னணியிலிருந்து செயற்பட்டு வருகிறார். சாதனைகளையும் படைத்தது, அதனை தனது சமூகத்துக்கும் கொண்டு சேர்க்கும் ஒரு சமூக செயற்பாட்டாளர். தமிழ் மற்றும் தமிழர் பற்று கொண்டவர் கந்தையா சிங்கம்.