தமிழ் நாட்டுக்கு வருபவர்களை சட்ட ரீதியில் கையாள்வோம் – தமிழக முதல்வர்

கடந்த இரண்டு தினங்களில் தமிழகத்துக்கு இலங்கையிலிருந்து கப்பல் மூலம் வருகை தந்துள்ள இலங்கை தமிழர்களை உரிய சட்ட முறையில் கையாள்வது தொடர்பில் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் நிலைமைகள் காரணமாக தமிழ் நாட்டுக்கு வந்தவர்கள் தொடர்பாக தொலைக்காட்சியில் பார்த்து அறிந்ததாகவும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு “மத்திய அரசு அதிகாரிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ள்ளதாகவும்” தமிழக சட்டமன்றத்தில் இன்று அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்தோடு “இலங்கை தமிழருக்கு புதிய விடியலை ஏற்படுத்த தமிழக அரசு செயற்படுமெனவும்” ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டின்றி சட்டவிரோதமாக நாட்டுக்குள் வந்தமைக்காக கைது செய்யப்பட்டு மூன்று பெரியவர்களும் ஒரு கை குழந்தையும் புழல் மத்திய சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இரண்டு சிறு பிள்ளைகள் குடியதம் அகதி முகாமில் உள்ள உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளனர். மிகுதி பத்து பேரும் மண்டபம் அகதி முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையிலிருந்து வருகை தருபவர்களை கைது செய்ய வேண்டாமென நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் இன்றைய தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து இதுவரை குழந்தைகள் அடங்கலாக 16 பேர் தமிழகத்துக்கு வருகை தந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

தமிழ் நாட்டுக்கு வருபவர்களை சட்ட ரீதியில் கையாள்வோம் - தமிழக முதல்வர்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version