தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சற்று முன்னர் சென்று திரும்பியுள்ளார். கடந்த 12 ஆம் திகதி அனுராதாபுர சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள்அச்சுறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதிகளை அவர் சந்திக்க அனுராதபுர சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.
கம்பஹா பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன, அனுராதபுர பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார, ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரசார செயலாளர் முருகேசு பரணீதரன் ஆகியோரும் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர்.
சிறைச்சாலைக்கு சென்று கைதிகளுடன் பேசிய போது இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை மதுபோதையில் சிறைக்கு வந்ததாகவும், துப்பாக்கியை லோட் செய்து அச்சுறுத்தியதாகவும் கைதிகள் தெரிவித்ததாக மனோ MP தெரிவித்துள்ளார்.
தற்செயலாக அந்த துப்பாக்கி வெடித்திருந்தால், தாங்கள் விடுதலை புலிகள் சந்தேக நபர்கள் என்ற காரணத்தினால், தாங்கள் அவரை கொலை செய்ய முயற்சித்ததாக தங்களை சுட்டிருப்பார்கள். கலவரம் நடந்ததாக கதை கட்டியிருப்பார்கள் எனவும் கைதிகள் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் தங்கள் சிறைச்சாலை விஜயம் தொடர்பாக அறிவித்த போதும், உடனடியாக உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. சபாநாயகரிடம் தான் பேசி சபாநாயகர் அறிவித்த பின்னரே சிறைச்சாலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டதாக மனோகணேசன் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வரப்பிரசாதங்கள் மறுக்கப்பட்டுள்ளன. தற்போதைய அரசாங்கத்தில் இதுதான் நடைபெறுகிறது எனவும் மேலும் மனோ கணேசன் தெரிவித்தார்.
கடந்த 12 ஆம் திகதி முன்னாள் சிறைசாலைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று தமிழ் கைதிகளை முழந்தாளிட வைத்து, துப்பாக்கியால் அச்சுறுத்திய செய்திகள் வெளியாகியிருந்தன. அதனை தொடர்ந்து அவர் குறித்த இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தததோடு தான் அவ்வாறு செய்ய முட்டாளில்லை எனவும் கூறியிருந்தார்.