அவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி தனது குடும்பத்தோடு நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நேற்று (04.04) அவர்கள் நாட்டை விட்டு வெளியேறி மாலைதீவுகளுக்கு சென்றுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சமூக வலைத்தளங்களில் நிசங்க சேனாதிபதி தனது குடும்பத்தோடு மாலைதீவுகள் விமான நிலையத்தில், விமானத்திலிருந்து இறங்கி விசேட வாகனங்களில் ஏறி செல்லும் காட்சிகள் வெளியாகியிருந்தன.
விமானத்தில் பயணித்த பயணிகள் விமானத்திலிருந்து குறித்த காட்சியினை ஒளிப்பதிவு செய்திருந்தினர். இருப்பினும் அந்த காட்சிகள் நிசங்க சேனாதிபதி மற்றும் அவரது குடும்பம் என்பதற்கான சான்றுகளாக இருக்கவில்லை.
நேற்று காலை 8.20 இற்கு குறித்த குடும்பம் ஸ்ரீலங்கன் விமான சேவையின் மூலமாக நாட்டை விட்டு சென்றுள்ளதாகவும், அவர்கள் செல்லும்போது விமான நிலைய கணினிகள், மற்றும் பாதுகாப்பு கமராக்கள் செயலிழக்கப்பட்டிருந்ததாகவும் செய்தி வெளியிட்டுள்ள ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த செயலிழப்பு தொடர்பில் விமான நிலைய காவற் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
