தனது தலைமையில் புதிய அமைச்சரவையோடு தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சி தொடருமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்றைய அரச தரப்பு கூட்டங்களில் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பலவேறு தரப்பினருடனான கூட்டங்கள் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்திருந்தது. சகல கட்சிகளையும் அமைச்சரவையில் இணைந்து கொள்ளுமாறு கோரிக்கை முன்வைத்த போதும் யாரும் இணைந்து கொள்ளாத நிலையில், நாளைய தினம் ஆளும் பொதுஜன பெரமுனவில் மீதமிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்து புதிய அமைச்சரவையை நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த புதிய அமைச்சரவையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தவிர அவரது குடும்ப உறுப்பினர்கள் வேறு யாரும் பங்கெடுப்பதில்லை என்ற முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன உள்ளடங்கலாக சில சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சு பதவிகளை தற்கால சூழலில் எடுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளதாகவும் அறிய கிடைக்கிறது.
இன்றைய தினம் நடைபெற்ற கலந்துரையாடல்களில் முக்கிய விடயங்கள் பேசப்பட்டுள்ளதாகவும் அவை தொடர்பில் நாளைய தினம் இறுதி முடிவெடுக்கப்படுமெனவும் தெரியவருகிறது. நாளைய சந்திப்புகளின் பின்னர் சில முக்கிய அறிவிப்புகள் நாளைய தினம் வெளியிடப்படுமெனவும் பரவலாக பேசப்படுகிறது.