பணி பகிஷ்கரிப்பில் தோட்டத்தொழிலாளர்கள் பங்கெடுங்கள் – த.மு.கூ

28 ஆம் திகதி நடைபெறவுள்ள தொழிற்சங்க பணி புறக்கணிப்பு போராட்டத்தில் தோட்ட தொழிலாளர்கள் அனைவரும் பங்குபற்றுமாறு தமிழ் முற்போக்கு கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது.

“28ம் திகதி நாடு தழுவிய நடைபெறவுள்ள ராஜபக்ச அரச எதிர்ப்பு கூட்டு தொழிற்சங்க வேலை நிறுத்தத்தில் மலையக தோட்டத்தொழிலாளர் உடன்பிறப்புகள் முழுமையாக கலந்துகொள்ள வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதிதலைவர் பழனி திகாம்பரம் ஆகியோர் கொழும்பிலும், பிரதி தலைவர் வே. இராதாகிருஷ்ணன் மலையகத்திலும் நடத்திய விசேட ஊடக சந்திப்புகளில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

“ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அனைத்து ராஜபக்ச அரசியல்வாதிகளும் தத்தம் பதவிகளை இராஜினாமா செய்து வீட்டுக்கு போக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நாடு தழுவிய உழைக்கும் மக்கள் நடத்தும் போராட்டத்தில், மலைநாட்டு தேயிலை, இறப்பர் பெருந்தோட்ட உழைக்கும் மக்களும் கலந்துக்கொள்ள வேண்டும்.

வேறு எவரையும் விட எமக்கே இதற்கான முழு உரிமை இருக்கிறது. “கோதா-கோ-ஹோம்” என்று இன்று சொல்லப்பட்டாலும் நாம் அன்றே “கோதா-டோன்ட்-கம்” என்று சொன்னவர்கள். அதாவது, “கோதா-வீட்டுக்கு-போங்கள்” என்று இன்று சொல்லப்பட்டாலும், நாம் அன்றே “கோதா-வர-வேண்டாம்” என்று சொன்னவர்கள். ஆகவே இன்று முழு நாடும் எமது கோசத்தையே எதிரொலிக்கின்றது.

எனவே 28ம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ள இந்த நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் முழு அளவில் கலந்துக்கொண்டு அமைதியாக எமது எதிர்ப்பை எடுத்துக்காட்டுமாறு தோட்டத்தொழிலாள உடன்பிறப்புகளை தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் அழைக்கின்றோம்.” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி பகிஷ்கரிப்பில் தோட்டத்தொழிலாளர்கள் பங்கெடுங்கள் - த.மு.கூ
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version