தமிழர் விடுதலை கூட்டணியின் புதிய நிர்வாகம் நேற்று கிளிநொச்சியில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அண்மையில் இடைக்கால நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டு செயற்பட்டு வந்த நிலையில் அதே நிர்வாகம் ஏகமனதாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய நிர்வாக சபை
தலைவர் – ப. சிறிதரன் (சட்டத்தரணி )
சிரேஷ்ர துணை தலைவர்- ஐயம்பிள்ளை அசோக்குமார்
செயலாளர் நாயகம் – வீ ஆனந்தசங்கரி.
நிர்வாகச் செயலாளர்- க. பூலோகரட்ணம்.
பொருளாளர்- தி சஞ்சயன்.
இணைப்பொருளாளர் – வேதாரணியன்.
இளைஞர் பேரவை தலைவர் – கணேசநாதன் சபேசன்.
மகளீர் பேரவை தலைவர் – திருமதி சூரியமூர்த்தி சூரியபிரதீபா வாசவன்
சட்டம் மற்றும் ஒழுங்கு தலைவர் – ஐயம்பிளை யசோதரன்.
தொழிற்சங்கத் தலைவர் – சித்திரவேல் தயாபரன்.
அண்மைக்காலமாக கட்சிக்குள் சிக்கல் நிலை காணப்பட்டதாகவும் அவை தீர்க்கப்பட்டு புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கட்சி செய்பாடுகள் இனி துரித கதியிலும், வேகமாகவும் நடைபெறுமென கட்சியின் இளைஞர் பேரவை தலைவர் கணேசநாதன் சபேசன் வி மீடியாவுக்கு தெரிவித்தார்.
எதிர்கால கட்சியின் செயற்பாடுகளுக்கும், நாட்டுக்கும், தமிழ் மக்களது அரசியல் மற்றும் பொருளாதார அபிலாஷைகளை தீர்ப்பதற்கும் இளைஞர்களது பங்களிப்பு மிக முக்கியமானது. இளைஞர்களை அதிகமா உள்ளெடுத்து தமிழர் விடுதலை கூட்டணியின் செயற்பாடுகளை வேகமாகவும், துரிதகதியில் கொண்டு செல்வதுமே தனது குறிக்கோள் என சபேசன் மேலும் தெரிவித்தார்.
“நீண்ட அரசியல் வரலாறு கொண்ட தமிழர் விடுதலை கூட்டணி, தமிழர் அரசியல் பரப்பில் தனது நடவடிக்கைளை நிச்சயம் தொடரும். அதனை பொறுப்பேற்றுள்ள புதிய நிர்வாகம் சரியான முறையில் செயற்படுத்தும். அரசியலில் நீண்ட அனுபவமுள்ள எமது செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரியின் வழிநடத்தலில் இளைஞர்களை முன் கொண்டுவந்து வடக்கு, கிழக்கு அரசியலில் மாற்றத்தை உருவாக்குவது எனது குறிக்கோள்” என இளைஞர் பேரவை தலைவர் சபேசன் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த மாற்றத்தின் மூலம் தமிழர் விடுதலை கூட்டணி “செட்டை கட்டி பறக்கும் என்ற கருத்தை ஏற்கனவே தமிழர் விடுதலை கூட்டணி செயலாளர் நாயகம் வி.ஆனந்தசங்கரி தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
